1922 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, CR&FC என பொதுவாக அறியப்படும் சிலோன் ரக்பி மற்றும் காற்பந்து கழகம் இலங்கை ரக்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் மிக்க முன்னணி கழகம் ஒன்றாகும். CR கழகமானது பல சிறந்த ரக்பி வீரர்களை இலங்கை நாட்டிற்காக உருவாக்கித் தந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த காலம்

1980ஆம் ஆண்டுகளில் CR&FC கழகமே இலங்கை ரக்பியில் ஆதிக்கம் செலுத்தி வந்ததுடன் 1987, 1988 மற்றும் 1989 என அடுத்தடுத்து மூன்று வருடங்கள் லீக் சம்பியன்களாக முடி சூடியது. சமீப வருடங்களிலும் CR&FC கழகம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதிலும், பல தடவைகள் பிரபல கண்டி அணியிடம் இறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தது. 2007 ஆம் ஆண்டில் கிலிஃபர்ட் சுற்றுப்போட்டியை வெற்றி கொண்டதே அவர்களால் இறுதியாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட மகத்தான வெற்றி எனக் கூறலாம்.

குழாம்

முன்னாள் வெஸ்லி கல்லூரி முன்வரிசை வீரர் ஷேன் சம்மந்தபெரும இப்பருவகாலத்திற்கான அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கடின உழைப்பு மற்றும் ஆடுகளத்தில் துரிதமான நகர்வுகளில் சிறந்த வீரர் என பலராலும்  பரவலாகப் பேசப்படுகின்ற வீரராவார். இம்முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ள அணியானது 12 தேசிய அணி வீரர்கள், 03 தேசிய கனிஷ்ட அணி வீரர்கள் என அனுபவம் மற்றும் இளம் வீரர்களைக் கலவையாகக் கொண்ட அணியாகும்.

அனுபவமிக்க வீரரான இஷான் நூர் உபாதையிலிருந்து திரும்பியுள்ளதுடன், இவரது மற்றும் ஷேன் இனது கூட்டணி முன்வரிசைக்கு பலம் சேர்க்கவுள்ளது. இலங்கை அணியின் 15 ஆம் இலக்க (full back) வீரர் ரீசா முபாரக் CR&FC அணிக்கு திரும்பியுள்ளதால், அணியின் பின்வரிசை வலுப்படுத்தப்பட்டுள்ளது. உதைக்கும் திறனில் இலங்கையின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்ற வகையில், ரீசாவின் உள்ளடக்கம் அணியின் வெற்றிக்கு சாதகமான காரணியாக அமையலாம்.

இளம் வீரர்கள்

‘ஸ்க்ரம்’ இன் மூன்றாம் வரிசைக்கு மூன்று இளம் வீரர்கள் களமிறங்கக் காத்துள்ளனர். ஷாவ்கிட் லாஹிர் மற்றும் தாரிக் சாலிஹ் 6ஆம், 7ஆம் இலக்க வீரர்களாக (பிளேன்கர்ஸ்) விளையாடவுள்ளதுடன், முன்னாள் கடற்படை வீரர் ஓமல்க குணரத்ன 8 ஆம் இலக்க நிலையில் களமிறங்கவுள்ளார்.

மற்றுமொரு வளர்ந்துவரும் வீரரான தரிந்த ரத்வத்த, முக்கியமான நிலையான 10 ஆம் இலக்கத்தில் (ப்ளை ஹாப்) தனது திறமையை வெளிக்காட்டவுள்ளார். அண்மையில் நிறைவடைந்த அணிக்கு எழுவர் கொண்ட ஆசிய ரக்பி சுற்றுத்தொடரில் தரிந்த ரத்வத்த அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவர் பின்வரிசையில் கவிந்து பெரேரா, சஷான் மொஹமட் மற்றும் ரீசா முபாரக் ஆகியோருடன் இணையவுள்ள நிலையில், CR&FC இடமிருந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

Dialog Rugby League Hub

பயிற்றுவிப்பாளர்கள்

முன்னாள் ஸ்கொட்லாந்து வீரர் பென் மெக்டவுகள் 2016/2017ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இராணுவ அணி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய இவர், CR&FC அணியின் வீரர்களை சிறப்பான முறையில் நெறிப்படுத்தி, இம்முறை டயலொக் ரக்பி லீக் சம்பியன்ஷிப்பை சுவீகரிக்க எதிர்பார்த்துள்ளார்.

[a-team-showcase-vc ats_team_id=”2142145″]