தற்பொழுது நடைபெற்று வரும் FA கிண்ணத்தின் 64 அணிகள் மோதும் சுற்றில் இலங்கை போக்குவரத்து அதிகாரசபை (SLTB) விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் இரண்டாம் பாதியில் பெறப்பட்ட கோல்களுடன் 2-0 என்ற வீதத்தில் கொழும்பு கால்பந்துக் கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.
இதற்கு முன்னைய சுற்றில் மன்னார் ஜோசப் வாஸ் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட SLTB விளையாட்டுக் கழகம், இந்தப் பருவகால தொடரில் முதல் முறையாக விளையாடும் கொழும்பு கால்பந்துக் கழகத்தை களனிய கால்பந்து மைதானத்தில் எதிர்கொண்டது.
கொழும்பு அணியின் முதல் முயற்சியாக ரௌமி மூலம் வழங்கப்பட்ட பந்தை சர்வான் மிக வேகமாக கோல்களை நோக்கி உதைய, கோல் காப்பாளரும் அணித் தலைவருமான சுதேஷ் அதனை பாய்ந்து மறைத்தார். எனினும் அதன்போது சர்வான் ஓப் சைட் இருந்ததாக நடுவரினால் சைகை காண்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் நிரான் கனிஷ்க வழங்கிய பந்தை ஒரு திசையின் எல்லைக் கோட்டில் இருந்து எடுத்துச் சென்ற நாகுர் மீரா, பின்கள வீரர்களையும் கடந்து சென்று குறுக்காக கோலை நோக்கி உதைந்தார். எனினும், கோல் காப்பாளர் கோலுக்கு அருகில் இருந்து பந்தை வெளியே தட்டி விட்டார்.
மறு பக்கம், SLTB வீரர்கள் பல முயற்சிகளை செய்தும் கொழும்பு அணியின் பின்கள வீரர்கள் அவற்றைத் தடுத்து வந்தனர். இந்நிலையில், அவர்களது முதல் கோல் முயற்சியாக நதீஷ வேகமாக உதைந்த பந்து கோல் கம்பங்களுக்கு மேலால் சென்றது. எனினும் அவரும் ஓப் சைடில் காணப்பட்டார்.
பின்னர் சிறந்த பந்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து இறுதியாக ஜயவீர வெகமாக கோலை நோக்கி உருட்டி அடித்த பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது. எனவே அவர்களது அடுத்த முயற்சியும் பயன் கொடுக்கவில்லை.
பின் களத்தில் இருந்து உயர்ந்து தன்னிடம் வந்த பந்தை இளம் வீரர் சஸ்னி அதே வேகத்தில் கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது. இதன்போதும் அவர் ஓப் சைட் இருந்ததாக நடுவரால் சைகை காண்பிக்கப்பட்டது.
முதல் பாதியின் இறுதி முயற்சியாக நதீஷ கோலை நோக்கி உதைந்த பந்தும் சிறந்த நிறைவைக் கொடுக்கவில்லை.
இதன் காரணமாக டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியனுக்கு SLTB வீரர்கள் கடும் அழுத்தம் கொடுத்த முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவடைந்தது.
முதல் பாதி: கொழும்பு கால்பந்துக் கழகம் 0 – 0 SLTB விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதியில் 52ஆம் நிமிடத்தில் மதுஷங்க பந்தை எடுத்துச் செல்லும்பொழுது எதிரணி வீரரின் உடம்பில் மோதி வீழ்ந்தார். எனினும் அதன்போது SLTB வீரர்களின் தடுப்பினால் தன்னிடம் வந்த பந்தை டிலான் கெளஷல்ய கோலாக்கி, கொழும்பு கால்பந்து அணிக்காக தனது கன்னி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
எதிரணி முதல் கோலைப் பெற்றிருந்த நிலையில், 55ஆவது நிமிடத்தில் SLTB வீரர் நதீஷ இப்போட்டியில் இரண்டாவது முறையும் மஞ்சள் அட்டை பெற்றமையினால், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து கொழும்பு அணிக்கான வாய்ப்புகள் கிடைத்து வந்த நிலையில், தமக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை சர்வான் உதைந்தார். அதன்போது பந்து இடது புற கம்பத்தை அண்மித்த நிலைய கோல் கம்ப வலையின் வெளிப் புறத்திற்கு சென்றது.
இவ்வாறாக அடுத்தடுத்து தொடர் வாய்ப்புகள் கொழும்பு கால்பந்து அணிக்கு கிடைத்தன. எனினும் அவற்றின்போது, சிறந்த முறையில் நிறைவு செய்யப்படாத நிலையிலும், இன்னும் சில சந்தர்ப்பங்களில் வீரர்கள் ஓப் சைட் இருந்தமையினாலும் இரண்டாவது கோல் பெறும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
SLTB யின் ப்ரீ கிக் வாய்ப்பின்போது, ஜயவீர உதைந்த பந்தை க்ரேகு கோலாக்க முயற்சித்தும் அது சிறந்த நிறைவாக இருக்கவில்லை. போட்டியில் SLTB வீரர்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த ஒரு வாய்ப்பாகவே அது இருந்தது.
பின்னர் மதுங்கவிற்கு வழங்கப்பட்ட பந்தை அவர் மைதானத்தில் நடுப் பகுதியில் இருந்து நீண்ட தூரத்திற்கு எடுத்துச் சென்று, பின்கள வீரர்களை பலரை ஏமாற்றி, இறுதியாக கோல் காப்பாளரையும் தாண்டி பந்தை கோலுக்குள் செலுத்தி, கொழும்பு அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்தும் மதுஷங்கவிற்கு கோலுக்கான வாய்ப்பு கிடைத்தும், அவர் அதிகமான நேரம் தன்னிடம் பந்தை வைத்திருந்ததால் எதிர் தரப்பினரால் அந்த வாய்ப்புகள் தடுக்கப்பட்டது.
இரண்டாவது பாதியை 10 வீரர்களுடன் விளையாடிய SLTB அணியின் ஜயவீர, பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து வேகமாக அடித்த பந்தை கோல் காப்பாளர் இம்ரான் பாய்ந்து தடுத்தார்.
பின்னர் அவர்களுக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போதும் சிறந்த முறையில் வழங்கப்பட்ட பந்தை இம்ரான் தடுக்க, பின்கள வீரர்களால் பந்து திசை திருப்பப்பட்டது.
போட்டி நிறைவடைய அண்மித்திருந்த நிலையில் மதுஷங்க பெனால்டி எல்லைக்கு அண்மையில் இருந்து கோலை நோக்கி வேகமாக உதைந்த பந்தை கோல் காப்பாளர் சுதேஷ் தட்டிவிட்டார்.
போட்டியின் மேலதிக நேரத்தில் இளம் வீரர் சப்ரான் சதார், மதுஷங்க மற்றும் சர்வான் என பலருக்கும் தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்த கொழுதும் அவர்கள் இறுதி நேரத்தில் மேற்கொண்ட முயற்சிகள் வீண் போனது.
ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் சர்வான் பெற்ற ப்ரீ கிக்கின்போது, பின்கள வீரர்களின் அனைத்துத் தடைகளையும் தாண்டி பந்து கோலை நோக்கி சென்றது. போட்டியில் தனது அபாரத்தைக் காட்டி வந்த சுதேஷ், நீண்ட தூரம் பாய்ந்து கோலுக்குள் செல்லும் அந்தப் பந்தை வெளியே தட்டி விட்டார்.
முழு நேரம்: கொழும்பு கால்பந்துக் கழகம் 2 – 0 SLTB விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – சுதேஷ் சுரங்க
போட்டியின் பின்னர் ThePapare.com இடம் பிரத்யேகமாகக் கருத்துத் தெரிவித்த கொழும்பு கால்பந்துக் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி, ”எனக்கு அவசரமாக கோல்கள் தேவைப்பட்டன. அதன் காரணமாகவே, அனுபவம் மிக்க சர்வானை மத்திய களத்திற்கு எடுத்து, இளம் வீரர் சஸ்னியை முன் களத்தில் களமிறக்கினேன். இந்தப் போட்டியில் மொமாஸ் யாப்போ இல்லாத குறையை நன்றாகவே உணர்ந்தோம்.
சர்வான், ரௌமி ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடினர். எனினும் முதுகில் உபாதை ஏற்பட்டுள்ள டிலான் மூலம் சிறந்த விளையாட்டைக் காண்பிக்க முடியாமல் போனது. எனினும் அவர் மீண்டு வருவார். முதல் பாதியின் தவறுகளை இரண்டாம் பாதியில் சரி செய்தமையினால் வெற்றி எமக்காகியது” என்றார்.
SLTB அணியின் பயிற்றுவிப்பாளர் P. விஜேசேகர கருத்துத் தெரிவிக்கையில், ”இந்தப் போட்டியில் மிகவும் பலம் பொருந்திய எதிர் தரப்பினர் குறித்து எமது வீரர்களுக்கு சற்று பயம் இருந்தது. அது போன்றே ஒரு வீரர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை எமக்கு பெரிதும் பாதிப்பாக அமைந்தது.
எனினும் இந்த அணியை நான் பொறுப்பெடுத்து சில மாதங்களே ஆகின்றன. எனவே, அவர்கள் இன்னும் ஒரு நிலைக்கு வரவில்லை. எனினும் நாம் சிறந்த நிலைக்கு முன்னேற்றமடைவோம்” என்றார்.
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கால்பந்துக் கழகம் – டிலான் கெளஷல்ய 52’, தனுஷ்க மதுஷங்க 78’
மஞ்சள் அட்டை
கொழும்பு கால்பந்துக் கழகம் – டிலான் கெளஷல்ய 22’, மொஹமட் அபீல் 35’, மொஹமட் சிராஜ் 57’
SLTB விளையாட்டுக் கழகம் – C. நதீஷ 35’ &55’, C. பெரேரா 60’சிவப்பு அட்டை
SLTB விளையாட்டுக் கழகம் – C. நதீஷ 55’