கனடா கிளோபல் டி-20 யில் விளையாடும் சந்திமால்

2084

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சந்திமால், கனடாவில் நடைபெறவுள்ள கிளோபல் டி-20 லீக் போட்டிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். 

விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் திக்வெல்லவுக்கு பதில் சந்திமால் மொன்ட்ரியல் டைகர்ஸ் அணிக்காக முதல் முறை விளையாடவுள்ளார். திக்வெல்ல இலங்கையில் நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

திவெல்ல தவிர, திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோரும் மொன்ட்ரியல் டைகர்ஸ் அணிக்காக இந்த ஆண்டு விளையாடவிருந்தபோதும் இந்த மூன்று வீரர்களும் 22 வீரர்கள் கொண்ட உத்தேச ஒருநாள் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.   

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

சந்திமால் இலங்கை அணியின் மூன்று வகை போட்டிகளிலும் தலைவராக செயற்பட்டபோதும் அண்மையில் முடிவுற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெறவில்லை. இதுவரை 54 டி-20 போட்டிகளில் விளையாடியிருக்கும் சந்திமாலின் ஓட்ட வேகம் 104.43 ஆகும். 29 வயதான சந்திமால் இதுவரை 120 உள்ளூர் டி-20 போட்டிகளில் விளையாடியிருப்பதோடு அவரது ஓட்ட வேகம் 117.23 என்பதோடு ஓட்ட சராசரி 28.58 ஆகும்.   

தேசிய அணிக்கு திரும்பும் நோக்கிலேயே சந்திமால் வெளிநாட்டு டி-20 லீக்கிற்கு தம்மை முன்னிறுத்தியிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. 

கிளோபல் டி-20 லீக்கின் இரண்டாவது தொடர் எதிர்வரும் ஜூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறும்.

>>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<<