லிவர்பூலின் சம்பியன்ஸ் லீக் கனவுக்கு சவால் விட்ட மெஸ்ஸி

114

லியோனல் மெஸ்ஸி இரண்டாவது பாதியில் பெற்ற இரண்டு அபார கோல்கள் மூலம் லிவர்பூல் அணிக்கு எதிரான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதியின் முதல் கட்ட (1st Leg) போட்டியில் பார்சிலோனா 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

தனது சொந்த மைதானமான கேம்ப நூவில் கடந்த புதன் (01) இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் உறுதியான வெற்றி ஒன்றை பெற்றதன் மூலம் ஸ்பெயின் கழகமான பாரிசிலோனா சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

மத்தியஸ்தரை அவமதித்த நெய்மாருக்கு 3 ஐரோப்பிய போட்டிகளில் தடை

சம்பியன்ஸ் லீக் தொடரில் மென்செஸ்டர் யுனைடெட் அணியிடம் தோல்வியடைந்த …..

மறுபுறம், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் லிவர்பூல் அணியின் வாய்ப்பு மங்கியுள்ளது. இந்நிலையில் வரும் மே 8ஆம் திகதி தனது சொந்த மைதானமான ஆன்பீல்ட்டில் நடைபெறவுள்ள, அரையிறுதியின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் லிவர்பூல், பார்சிலோனாவை விஞ்சுவதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

பார்சிலோனாவின் ஆதிக்கத்துடனேயே முதல் கட்ட அரையிறுதிப் போட்டி ஆரம்பமானது. எதிரணி எல்லையின் இடது பக்கமாக ஜோர்டி அல்பா பந்தை பரிமாற்றும்போது லிவர்பூல் பின்களத்தில் ஏற்பட்ட பிளவு லுயிஸ் சுவாரெஸுக்கு சாதகமாக மாறியது.

முன்னாள் லிவர்பூல் வீரரான சுவாரெஸ் கோல் கம்பத்தில் ஆறு யார்ட் பெட்டியின் இடது பக்கமிருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார். 26 ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட இந்த கோல் மூலம் பார்சிலோன முதல் பாதியில் முன்னிலை பெற்றது.

எனினும், முதல் பாதி முடிவதற்குள் சாடியோ மானேவுக்கு போட்டியை சமநிலை செய்யும் வாய்ப்பு ஒன்று ஏற்பட்டது. ஜோர்டன் ஹென்டர்சன் கச்சிதமாக பந்தை மானேவிடம் கொடுத்தபோது அது வலைக்குள் விழும் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பந்தை கம்பத்திற்கு வெளியால் செலுத்தினார்.

முதல் பாதி: பாசிலோனா 1 – 0 லிவர்பூல்

பார்சிலோனாவின் கோல் இயந்திரங்களான மெஸ்ஸி, சுவாரெஸ் மற்றும் பிலிப்பே கோடின்ஹோவை கட்டுப்படுத்துவதில் லிவர்பூல் ஆரம்பத்தில் சிறப்பாக செயற்பட்டதை பார்க்க முடிந்தது. இதனால் இரண்டாவது பாதியின் ஆரம்ப நிமிடங்களில் இழுபறியுடனேயே ஆட்டம் நீடித்தது.

பார்சிலோனாவுக்கு இலகு வெற்றி: ஜுவண்டஸ் – ஏஜெக்ஸ் மோதல் சமநிலையில்

ஐரோப்பியாவில் மிகவும் பிரபலமான …….

ஆனால் 75 ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணித் தலைவர் மெஸ்ஸி ஆட்டத்தை முழுமையாக திசை திருப்பினார். சுவாரெஸ் உதைத்தபந்து கோல் கம்பத்தில் பட்டு மெஸ்ஸியிடம் வந்தபோது இடது பக்க மேல் மூலையில் வலைக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து பந்தை கோலாக மாற்றினார்.

தொடர்ந்து ஏழு நிமிடங்களில் மெஸ்ஸி லிவர்பூலுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்தார். 35 யார்ட் தூரத்தில் இருந்து மெஸ்ஸி உதைத்த ப்ரீ கிக் எதிரணி கோல்காப்பாளருக்கு நெருங்க முடியாமல் வலைக்குள் புகுந்தது.

இந்த கோலின் மூலம் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக தனது 600 ஆவது கோலை பூர்த்தி செய்தார். 2005ஆம் ஆண்டு மே மாதம் அல்பாசிட்டே அணிக்காக முதல் கோலை பெற்ற மெஸ்ஸி 14 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.

அதேபோன்று, இந்த கோல்கள் மூலம் பார்சிலோன (502) சம்பியன்ஸ் லீக்கில் 500 கோல்கள் பெற்ற இரண்டாவது அணியாக சாதனை படைத்தது. இதற்கு முன்னர் ரியல் மெட்ரிட் (551) இந்த மைல்கல்லை எட்டியது.

முழு நேரம்: பாசிலோனா 3 – 0 லிவர்பூல்

கோல் பெற்றவர்கள்

லுயிஸ் சுவாரெஸ் 26′, லியோனல் மெஸ் 75, 82

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<