கட்புலனற்றோருக்கான டி-20 போட்டியில் இந்தியாவிடம் போராடித் தோற்ற இலங்கை

257
Blind Triangular Cricket Series

இலங்கை, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றலுடன் இடம்பெற்று வருகின்ற முத்தரப்பு டி-20 தொடரின் ஐந்தாவது போட்டியில், இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியிடம் ஒரு ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இதன்படி, இந்தியா இந்தப் போட்டித் தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்து லீக் ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவாத அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

எனினும், போட்டியின் இறுதிப் பந்து வரை இந்திய அணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த இலங்கை கட்புலனற்றோர் அணி, இதுவரை பங்குபற்றிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

>> முத்தரப்பு T20 தொடரில் இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு முதல் வெற்றி

கோவாவில் உள்ள GCA மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணித் தலைவர் பிரியந்த குமார முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய கட்புலனற்றோர் அணிக்கு வழங்கினார்.

இந்திய கட்புலனற்றோர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பி. ஜயராமைய்யா மற்றும் ஜி. முகுத்கர் ஜோடி அரைச்சத இணைப்பாட்டமொன்றைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

எனினும் எஸ் துஷாரவின் அபார பந்துவீச்சில் 27 ஓட்டங்களைப் பெற்ற பி. ஜயராமைய்யா போல்ட் முறையில் ஆட்டமிழந்ததுடன், அடுத்து வந்த் என். தும்பா ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து எஸ் ரமேஷ் மற்றும் ஏ. ரெட்டி ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்கு 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இந்திய அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர்.

இதன்படி,  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 192 ஓட்டங்களை இந்திய அணி பெற்றது. துடுப்பாட்டத்தில் அசத்திய எஸ். ரமேஷ் 64 ஓட்டங்களையும், ஏ. ரெட்டி ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் எஸ். துஷார 2 விக்கெட்டுக்களையும், டி. ரவீந்திர மற்றும் பெதும் சமன் குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை கட்புலனற்றோர் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளும் 53 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

இதனையடுத்து மத்திய வரிசையில் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல இலங்கை மேலும் நெருக்கடிக்கு முகங்கொடுத்தது.

எனினும் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டி. மதுகம மற்றும் அணித் தவைவர் பிரியந்த குமார இருவரும் இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதன்படி, இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 11 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ரெட்டி வீசிய பந்தில் பிரியந்த அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். அடுத்த 4 நான்கு பந்துகளிலும் இலங்கை வீரர்களால் ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

>> மும்பை அணியிலிருந்தது மாலிங்கவின் பந்துவீச்சை அறிய உதவியாக இருந்தது – ஜோஸ் பட்லர்

எனவே, இந்தியாவின் அபார பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி,  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. இதில் இலங்கை அணியின் 6 துடுப்பாட்ட வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை அணி சார்பாக, பிரயந்த குமார 43 ஓட்டங்களை பெற்றதோடு பெதும் சமன் குமார 36 ஓட்டங்களையும், டி. மதுகம 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சுனில் ரமேஷ் தெரிவானார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை கட்புலனற்றோர் அணி தமது இறுதி லீக் ஆட்டத்தில் நாளை (11) இங்கிலாந்து கட்புலனற்றோர் அணியை சந்திக்கவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்திய கட்புலனற்றோர் அணி – 192/5 (20) –  எஸ். ரமேஷ் 64, ஏ. ரெட்டி 44*, எஸ். துஷார 2/30, டி. ரவீந்திர 1/28, பெதும் சமன் குமார 1/20

இலங்கை கட்புலனற்றோர் அணி – 191/9 (20) – பிரயந்த குமார 43, பெதும் சமன் குமார 36, டி. மதுகம 35, டி மலிக் 1/16

முடிவு – இந்திய கட்புலனற்றோர் அணி 1 ஓட்டத்தால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<