UAE அணியுடன் T20I தொடரில் விளையாடும் பங்களாதேஷ்

Bangladesh Tour Of UAE, 2025

101
Bangladesh Tour Of UAE, 2025

ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்களாதேஷ் அணி விளையாடவுள்ளது. 

பங்களாதேஷ் அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்தது.   

இதனையடுத்து பங்களாதேஷ் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான T20I தொடரானது மே 25ஆம் திகதி முதல் ஜூன் 3ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. மேலும், இத்தொடரின் முதலிரண்டு போட்டிகள் பைசலாபாத்திலும், கடைசி மூன்று போட்டிகள் லாகூர் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன 

இந்த நிலையில், இத்தொடருக்கு முன்னதாக பங்களாதேஷ் அணியானது ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது T20I போட்டி மே 17ஆம் திகதியும், இரண்டாவது T20I போட்டி மே 19ஆம் திகதியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது 

இதன்மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேச அணி ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கு எதிராக இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு இவ்விரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடினர். துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 2-0 என்ற கணக்கில் ஐக்கிய அரபு இராச்சியம் அணியை வீழ்த்தி தொடரையும் முழுமையாகக் கைப்பற்றிமை குறிப்பிடத்தக்கது 

இந்த தொடர் குறித்து பேசிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி நிஸாய் உதின் சௌத்ரி, ‘இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடர் உட்பட, சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான எமது அணியின் தயாரிப்புகளில் இந்தப் போட்டிகள் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். இந்த இரண்டு போட்டிகளும் இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்கும் இடையேயான கிரிக்கெட் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்கை வழங்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்என்றும் தெரிவித்துள்ளார். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<