T20 உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

10
Bangladesh T20 World Cup 2026

அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை (BCB) அறிவித்துள்ளது.

>>பங்களாதேஷின் T20 உலகக் கிண்ண போட்டிகள் இலங்கையில்?<<

அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியில் அயர்லாந்து தொடரினை தவறவிட்ட முன்னணி வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹமட் அணிக்குத் திரும்பியுள்ளார்.

லிடன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் அணியில் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ஜாகேர் அலிக்கு இடம் கிடைக்கவில்லை. அத்துடன் முன்னணி வீரரான நஜ்முல் ஹொசைன் ஷண்டோவிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேவேளை முன்வரிசைத் துடுப்பாட்ட வீரரான சயீப் ஹஸன் பங்களாதேஷ் அணியின் பிரதி தலைவராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர பங்களாதேஷ் அணியின் எஞ்சிய குழாம், முன்னணி வீரர்கள் மூலம் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் T20 உலகக் கிண்ண போட்டிகள் இந்தியாவின் கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட போதும், இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையில் நிலவும் அரசியல் முரண்பாடுகளால், பங்களாதேஷ் தாம் ஆடும் போட்டிகளை T20 உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என ஐ.சி.சி. இடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

 

லிடன் தாஸ் (தலைவர்), சயீப் ஹஸன் (பிரதி தலைவர்), தன்சிட் ஹசன், பர்வேஸ் ஹொசைன் இமோன், தவ்ஹீத் ரிதோய், ஷமீம் ஹொசைன், நூருல் ஹசன், மஹேதி ஹசன், ரிஷாட் ஹொசைன், நசூம் அஹமட், முஸ்தபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹஸன் ஷகீப், தஸ்கின் அஹமட், மொஹமட் சைபுதீன், ஷொரிபுல் இஸ்லாம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<