பங்களாதேஷ் ஒருநாள் அணியில் இணையும் நசும் அஹ்மட்

West Indies Tour of  Bangladesh 2025

40
nasum ahmed

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் இடதுகை சுழல்பந்து வீச்சாளர் நசும் அஹ்மட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

30 வயதான நசும், 18 ஒருநாள் போட்டிகளில் 4.48 என்ற சராசரியுடன் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் கடைசியாக 2024 டிசம்பரில் ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் (18) மிர்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது. பங்களாதேஷ் அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகளின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் காரி பியர் 10 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதேவேளை; ரோஸ்டன் சேஸும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

எனவே, குறித்த போட்டியானது இரண்டு அணிகளினதும் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தைக் கொடுத்திருந்த நிலையில், எஞ்சிய இரு போட்டிகளையும் கருத்தில் கொண்டு நசும் அஹ்மட்டை அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் ஒக்டோபர் 21 மற்றும் 23 ஆகிய திகதிகளில் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<