பாடசாலை கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து சாதனை படைத்தார் அவிஷ்க

85

வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணியின் சகலதுறை வீரரான அவிஷ்க தரிந்து, பாடசாலைகள் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக புதிய சாதனை படைத்தார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இறுதி நேரத்தில் தவறவிட்ட அவிஷ், தனது துடுப்பாட்டத் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கிடையிலான சிங்கர் கிண்ண 19 வயதுக்குட்பட்ட டிவிஷன்-1 போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

இதில் லும்பினி கல்லூரிக்கு எதிராக நேற்று (18) நிறைவுக்கு வந்த போட்டியில் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணி வீரர் அவிஷ்க தரிந்து முச்சதம் கடந்து புதிய சாதனை படைத்தார்.

சதத்தினை தவறவிட்ட தரங்க பரணவிதான

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), பிரிவு A உள்ளூர் கழகங்கள்……

வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் லும்பினி கல்லூரியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணி 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

அதன் பிறகு களமிறங்கிய அவிஷ்க தரிந்து, கவிஷ்க கிம்ஹானவுடன் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்காக 110 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச் சேர்த்தார். இதில் கிம்ஹான 25 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த கவீஷ துலஞ்சன அவிஷ்கவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவ்விரண்டு வீரர்களும் 7ஆவது விக்கெட்டுக்காக 254 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதில் 56 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 285 பந்துகளுக்கு முகங்கொடுத்த அவிஷ்க தரிந்து, 350 ஓட்டங்களை எடுத்து அசத்தினார்

இதன் மூலம், இலங்கையின் பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் வீரரொருவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியது

முன்னதாக 1996ஆம் ஆண்டு புனித பேதுரு கல்லூரிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி அணி வீரர் தம்மிக வாஸ் 310 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார்

எனவே, சுமார் 24 வருடங்களுக்குப் பிறகு அவிஷ்க தரிந்து அந்த சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இந்தப்பட்டியலில் மாத்தறை புனித தோமியர் கல்லூரி அணி வீரரான இந்திக டிசேரம், அம்பாலங்கொட தேவானந்தா கல்லூரிக்கு எதிராக 1993ஆம் ஆண்டு 304 ஓட்டங்களைக் குவித்திருந்தார்

இதன்படி,அவிஷ்க தரிந்துவின் முச்சதத்தின் உதவியுடன் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 514 ஓட்டங்களைக் குவித்தது

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய லும்பினி கல்லூரி, 160 ஓட்டங்களுக்கு சுருண்டது.  

இதனையடுத்து 354 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டநேரம் நிறைவுக்குவர போட்டி சமநிலை அடைந்தது

வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்க தரிந்து 79 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்

எனவே, இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 429 ஓட்டங்களைக் குவித்த அவிஷ்க தரிந்து, இலங்கையின் பாடசாலைகள் கிரிக்கெட்டில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியது.

அது மாத்திரமின்றி, 5 ஓட்டங்களால் இப்பருவகாலத்தில் 1000 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைதவறவிட்டார்

இதேவேளை, இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக தொடர்ந்து விளையாடிவந்த 18 வயதான சகலதுறை வீரரான இவர், துரதிஷ்டவசமாக இம்முறை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இளையோர் உலகக்கிண்ண அணியிலிருந்து இறுதி நேரத்தில் நீக்கப்பட்டார்

இந்த நிலையில், தன்னை உலகக்கிண்ண அணியில் இருந்து எந்தவொரு காரணமும் இல்லாமல் நீக்கியதை எதிர்த்து விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலகங்ளுக்கு அவிஷ்க தரிந்து கடிதம் எழுதியிருந்தார்.

எனினும், இம்முறை இளையோர் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பிராகாசிக்கத்தவறியதால் தான் அவரை உலகக்கிண்ண அணியில் இணைத்துக்கொள்ளவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதுஇவ்வாறிருக்க, பாடசாலை கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்தவீரராக இடம்பெறக் கிடைத்தமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவிஷ்க தரிந்து

”லும்பினி கல்லூரிக்கு எதிராக முச்சதம் அடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் என்னை அணியில் இருந்து நீக்கியது கவலையளித்தது.” 

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவராக திலகரட்ன டில்ஷான்

இந்த ஆண்டில், கிரிக்கெட் விளையாட்டானது ஒரு புதிய…..

”இதனால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். இறுதியாக நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 2 போட்டிகளில் என்னால் பிரகாசிக்க முடியாமல் போனது

”எனது பயிற்சியாளரிடம் இருந்து துடுப்பாட்டத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு இந்தப் போட்டியில் களமிறங்கினேன்” என தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<