கம்மின்ஸின் வேகத்தால் மூன்று நாட்களில் முடிவை எட்டிய முதல் டெஸ்ட்

525

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக பிரிஸ்பேன் த கெப்பா மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் (பகலிரவு) பெட் கம்மின்ஸின் அபார வேகப்பந்து வீச்சின் உதவியுடன் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று,  பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் தங்களுடைய ஆதிக்கத்தை தக்க வைத்துள்ளது. 

ஆஸியின் வேகத்திற்கு முன் தனியாளாக போராடிய டிக்வெல்ல

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனின்…

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டமான இன்று இலங்கை அணி, அவுஸ்திரேலிய அணியின் 179 ஓட்டங்கள் என்ற முன்னிலையை தகர்க்கும் நோக்கில் துடுப்பெடுத்தாடிய நிலையில், பெட் கம்மின்ஸின் அபார பந்து வீச்சால் வெறும் 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

நேற்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் இன்றைய தினம் களமிறங்கியது. இதில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பம் முதல் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஓட்டங்களின்றி கம்மின்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, குசல் மெண்டிஸ் (0) மற்றும் ரொஷேன் சில்வா (03) ஆகியோரும் ஏமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெளியேறினர்.

Photos: Sri Lanka Vs Australia 1st Test – Day 3

இதன் பின்னர் களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களில் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 24 ஓட்டங்களையும், போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய லஹிரு திரிமான்னே 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். இவர்களை தவிர ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதில், தசைப்பிடிப்பு உபாதைக்குள்ளான லஹிரு குமார துடுப்பெடுத்தாட களமிறங்காத நிலையில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், அபாரமாக பந்து வீசிய பெட் கம்மின்ஸ் 23 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை தன் வசப்படுத்தினார். இவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய் ரிச்சட்சன் 2 விக்கெட்டுகளையும், நெதன் லையன் ஒரு விக்கெட்டினையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்தப் போட்டியை பொருத்தவரை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 144 ஓட்டங்களுக்கு சுருண்டதுடன், இலங்கை அணி சார்பில்  அதிக பட்சமாக நிரோஷன் டிக்வெல்ல 64 ஓட்டங்களை பெற்றதுடன், பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸியை வேகத்தால் கட்டுப்படுத்திய சுரங்க லக்மால்

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் முதலாவது…

பின்னர், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ட்ராவிஷ் ஹெட் மற்றும் மெர்னஸ் லெபுச்செங் ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 323 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ட்ராவிஷ் ஹெட் 84 ஓட்டங்களையும், லெபுச்செங் 81 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்து வீச்சில் சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றியை தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என முன்னேறியுள்ளதுடன், அவர்கள் விளையாடிய 5 பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளனர். அதேநேரம், இலங்கை அணி 3 பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி, தங்களுடைய முதலாவது தோல்வியை இன்றைய தினம் சந்தித்துள்ளது. இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் முதலாம் திகதி கென்பெராவில் நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்