சுற்றுலா அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு எதிராக ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (26) நடைபெற்ற நான்காவது T20 போட்டியில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இளையோர் இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றிய இளையோர் இலங்கை மகளிர் அணி இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 4 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றி முன்னிலை பெற்றது.
3ஆவது போட்டியைப் போல இப்போட்டியும் சீரற்ற காலநிலையால் தாமதித்து ஆரம்பிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு இன்னிங்ஸும் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதன்படி, நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இளையோர் இலங்கை மகளிர் அணியினர், 9 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ஓட்டங்கள் எடுத்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை சஞ்சனா காவிந்தி 16 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 25 ஓட்டங்களையும், அணித் தலைவி மனுதி நாணயக்கார 17 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்துவீச்சில் லூசி ஃபின் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
- சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை மகளிர் இளையோர் அணிக்கு முதல் வெற்றி
- 2ஆவது T20 போட்டியிலும் இலங்கை இளையோர் மகளிர் அணிக்கு வெற்றி
- சஞ்சனாவின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் வெற்றி
இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் மழை காரணமாக 6.3 ஓவர்களில் போட்டி நிறுத்தப்பட்டபோது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 55 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஆனால், வெற்றி பெற அவர்கள் அந்த நேரத்தில் 65 ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டியிருந்தது. எனவே, இப்போட்டியில் இளையோர் இலங்கை மகளிர் அணியானது டக்வர்த் லூயிஸ் முறைப்படி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்காக ஷிலோ ஜூலியன் 11 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரியுடன் 16 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, இலங்கை அணிக்காக சமோதி ப்ரபோதா, ரிஸ்மி சஞ்சனா மற்றும் அசேனி தலகுணே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான 5ஆவதும், இறுதியுமான T20 போட்டி நாளை (28) திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
இளையோர் இலங்கை மகளிர் அணி – 83/6 (9) சஞ்சனா காவிந்தி 25, மனுதி நாணயக்கார 17, லூசி ஃபின் 2/16
அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணி– 55/4 (6.3) ஷிலோ ஜூலியன்16, சாமோதி ப்ரபோதா 1/1, ரிஸ்மி சஞ்சனா 1/10, அசேனி தலகுணே 1/10
முடிவு – இளையோர் இலங்கை மகளிர் அணி 9 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<