சஞ்சனாவின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் வெற்றி

Australia U19 Women's tour of Sri Lanka 2025

42
Australia U19 Women's tour of Sri Lanka 2025

சுற்றுலா அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு எதிராக ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (24) நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இளையோர் T20 தொடரில் இலங்கை மகளிர் அணி 3 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று T20 தொடரையும் கைப்பற்றியது.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய போட்டியானது தாமதித்து ஆரம்பித்ததால் அணிக்கு 16 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி, நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணி 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் எமிலி பவல் 32 ஓட்டங்களையும் லூசி பின் 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

இலங்கையின் பந்துவீச்சில் லிமன்சா திலகரட்ன 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அசேனி தலகுணே 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

101 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் சஞ்சனா காவிந்தி 36 ஓட்டங்களையும், விமோக்ஷிகா பாலசூரிய 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். அவர்களைவிட நேதாஜி இசுராஞ்சலி 11 ஓட்டங்களையும், ஷஷினி கிம்ஹானி ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லில்லி ஹெமில்டன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக பிரகாசித்து வரும் ரத்கம, தேவபத்திராஜா வித்தியாலயத்தைச் சேர்ந்த 16 வயது வீராங்கனையான சஞ்சனா காவிந்தி ஆட்டநாயகி விருதை வென்றார் இதில் முதலாவது போட்டியில் 62 ஓட்டங்களையும் இரண்டாவது போட்டியில் 24 ஓட்டங்களையும் நேற்று நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் 36 ஓட்டங்களையும்  பெற்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 4ஆவது T20 போட்டி 26ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணி – 100/6 (16) எமிலி பவல் 32, லூசி ஃபின் 31, லிமன்சா திலகரட்ன 2/20, அசேனி தலகுணே 2/25

 

இலங்கை இளையோர் மகளிர் அணி – 101/4 (15.1) சஞ்சனா கவிந்தி 36, விமோக்ஷா பாலசூரிய 25, லில்லி ஹெமில்டன் 2/16

 

முடிவு – இலங்கை இளையோர் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<