பங்களாதேஷில் T20I தொடரில் விளையாடவுள்ள ஆஸி., நியூசிலாந்து

Bangladesh Cricket

152
Bangladesh Cricket

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள், மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர்களுக்காக, எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டுக்கு வரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி ஒக்டோபர் மாதத்தில் பங்களாதேஷிற்கு வரவுள்ளதுடன், நியூசிலாந்து அணி T20I உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தலை மேற்கொள்ளும் வகையில், செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. 

மீண்டும் களத்தில் குதிக்கும் இலங்கை லெஜன்ட்ஸ் அணி

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை ஏற்கனவே ஒத்திவைத்திருந்தன. குறித்த இந்த இரண்டு தொடர்களும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடராக இருந்த போதிலும், கொவிட்-19 வைரஸ் காரணமாக குறித்த தொடர்கள் ஒத்திவைவக்கப்பட்டிருந்தன. 

இந்தநிலையில், மீண்டும் குறித்த டெஸ்ட் தொடர்களை நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதால், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் T20I தொடர்களுக்காக பங்களாதேஷ் வரவுள்ளதாக, கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாமுதீன் சௌத்ரி தெரிவித்துள்ளார். அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலிய தொடரையடுத்து இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடருக்காக பங்களாதேஷ் வரவுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் முத்தரப்பு T20I தொடர் நடைபெறவது தொடர்பில் இவர் உறுதிசெய்யவில்லை. குறித்த இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிட்ட நிஷாமுதீன் சௌத்ரி, “இங்கிலாந்து தொடரானது, எமது இந்த பருவகாலத்துக்கான போட்டி அட்டவணையில் உள்ளது. எனினும், முத்தரப்பு தொடர் குறித்து இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. முத்தரப்பு  தொடரை நடத்துவதற்கு அனைத்து கிரிக்கெட் சபைகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் திகதிகள் அறிவிக்கப்படும்” ன்றார்.

இதேவேளை, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கொவிட்-19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடர்கள் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை எனவும், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாத்திரமே விளையாட முடியும் எனவும் நிஷாமுதீன் சௌத்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.

“நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறும் என நான் நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஏப்ரல் மாதத்தில் வாய்ப்பிருக்கிறது. எனினும், அந்த காலப்பகுதியை இலங்கை அணிக்கு எதிரான தொடருக்காக ஒதுக்கியுள்ளோம்” என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<