தென் கொரியாவின் யெச்சியோன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 20 வயதின்கீழ் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாளான இன்று (05) இலங்கை அணி 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தன.
பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வலள ஏ ரத்நாயக கல்லூரியின் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வெல்ல, 4X400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் களமிறங்கிய இலங்கை அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
அதேபோல, ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் காவத்தை மத்திய மகா வித்தியாலய வீரர் மலித் யசிரு வெண்கலப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
20ஆவது 20 வயதின்கீழ் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாளான இன்று (05) பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட வலள ஏ ரத்நாயக கல்லூரியின் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
போட்டி தூரத்தை 2 நிமிடங்கள், 05.64 செக்கன்களில் நிறைவு செய்த அவர், இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்காக முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் சுவீகரித்தார். எனவே, இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் அவர் வென்ற 2ஆவது பதக்கம் இதுவாகும்.
இதனிடையே, தருஷி கருணாரத்ன பங்குகொண்ட பெண்களுக்கான 800 மீட்டரில் கஸகஸ்தானின் அக்பயான் (2 நிமி. 10.22 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், சீனாவின் கின் (2 நிமி. 11.14 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.
இ;ந்த நிலையில், இன்று மாலை நடைபெற்ற 4X400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் இந்தியா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளைப் பின்தள்ளி இலங்கை அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள், 25.410 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது. இளையோர் மெய்வல்லுனர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணியினால் பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாக இது இடம்பிடித்தது.
தங்கப் பதக்கம் இலங்கை அணியில் வினோத் ஆரியவன்ச, ஜயேஷி உத்தரா, ஷெஹான் தில்ரங்க மற்றும் தருஷி கருணாரத்ன ஆகியோர் இடம்பெற்றனர்.
இதனிடையே, குறித்த போட்டியில் தென் கொரியாவின் அணி (3:28.293) வெள்ளிப் பதக்கத்தையும் இந்தியாவின் அணி (3:30.129) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
ஆசிய இளையோர் மெய்வல்லுனரில் தருஷிக்கு வெள்ளி, ஜயேஷிக்கு வெண்கலம்
இதேநேரம், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் காவத்தை மத்திய மகா வித்தியாலய வீரர் மலித் யசிரு 15.82 மீட்டர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இப் போட்டியில் 16.08 மீட்டர் தூரம் பாய்ந்த ஜப்பான் வீரர் மனாட்டோ மியாஓ தங்கப் பதக்கத்தையும், சீனாவின் மா யிங்லொங் 15.98 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
இது இவ்வாறிருக்க, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டம் முதல் சுற்றில் பங்குகொண்ட இலங்கை வீரர் வினோத் ஆரியவன்சவிற்கு 5ஆவது இ;டத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது.
இதன்படி, ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாள் நிறைவடையும் போது இலங்கை அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
நாளை (06) போட்டியின் மூன்றாவது நாளாகும்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<




















