ஆசிய இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற தமிழ் பேசும் வீரர்கள்

ASBC Asian U22 & Youth Boxing Championships 2025

21

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை குத்துச்சண்டை சங்கம் ஏற்பாடு செய்த ASBC ஆசிய 22 வயதுக்குட்பட்டோர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 5 வெள்ளிப் பதக்கங்கள், 18 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 23 பதக்கங்களை வென்றெடுத்தனர். 

இதில் சிறப்பம்சம் என்னவெனில், இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை வென்று கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரியின் யஸ்மின் மொஹமத் உசெய்த், வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அதேபோல, வவுனியாவைச் சேர்ந்த கஜிந்தினி லோகநாதன் மற்றும் உதயகுமார் கீர்த்தனா ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்தனர் 

கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், வியட்நாம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வீர, வீராங்கனைகள் பங்குகொண்ட ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் (17 மற்றும் 18 வயது) குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடர் கடந்த மே மாதம் 12ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ள அரங்கில் ஆரம்பமாகியது 

சுமார் 57 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற ஆசிய மட்ட குத்துச் சண்டைப் போட்டியாக இது வரலாற்றில் இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அதேபோல, வரவேற்பு நாடாக இத் தொடரை நடத்திய இலங்கை சார்பில் 33 வீர, வீராங்கனைகள் இம்முறை போட்டித் தொடரில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், கடந்த 12 நாட்களாக நடைபெற்ற ஆசிய 22 வயதுக்குட்பட்டோர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான நேற்றைய தினம் (23) தங்கம் பதக்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் நான்கு இலங்கை வீரர்கள் களத்தில் குதித்தனர். 

இதில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஸ்மின் மொஹமத் உசெய்த், ஆண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸகஸ்தான் வீரர் அமான் கொன்ஸ்பெக்கோவிக்கு இறுதி வரை மிகவும் கடுமையான போட்டியைக் கொடுத்து 0 – 3 சுற்றுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். 

இருப்பினும், கஸகஸ்தான் வீரருக்கு இறுதி வரை தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மொஹமத் உசெய்த், முதல் சுற்றின் முடிவில் எதிராளியை விட 6 புள்ளிகள், இரண்டாவது சுற்றின் முடிவில் 5 புள்ளிகள் மற்றும் மூன்றாவது சுற்றின் முடிவில் 5 புள்ளிகள் பின்தங்கினார். எவ்வாறாயினும், மொஹமத் உசெய்த்தின் தோல்வியுடன், இம்முறை ஆசிய இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கையின் தங்கப் பதக்கம் வெல்லும் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது. 

எவ்வாறாயினும், இம்முறை ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் (17 மற்றும் 18 வயது) குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் காலிஇறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற ஒரேயொரு இலங்கை வீரராக 20 வயதுடைய யஸ்மின் மொஹமத் உசெய்த இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

இதனிடையே, ஆசிய இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான நேற்று நடைபெற்ற 22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டியில் மூன்று இலங்கை வீராங்கனைகள் பங்கேற்றனர். குறித்த 3 வீராங்கனைகளும் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்ததன் காரணமாக, அவர்கள் மூவருக்கும் வெள்ளிப் பதக்கங்களுடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது. 

63 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸகஸ்தான் வீராங்கனை ஸங்கபயேவா அருஸானை எதிர்கொண்ட ஹன்சனி நாயக்கரத்ன, 75 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸகஸ்தான் வீராங்கனை நலிபே ஷகிலாவை எதிர்கொண்ட மஞ்சரி சந்துனிக்கா நரசிங்க மற்றும் 81 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸகஸ்தான் வீராங்கனை ஸரக்ஸ்கிஸி ஸிபேக்கை எதிர்கொண்ட நெத்மி தருஷிக்கா நாகந்தலகே ஆகிய மூவருமே இவ்வாறு முதல் சுற்றுடனேயே தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது. 

இது இவ்வாறிருக்க, ஆசிய 22 வயதுக்குட்பட்டோர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் வவுனியாவைச் சேர்ந்த 2 தமிழ் வீராங்கனைகள் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர். 

பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் களமிறங்கிய லோகநாதன் கஜிந்தினி, சர்வதேச குத்துச்சண்டை சங்க கொடியின்கீழ் நடுநிலையாளராக பங்குபற்றிய இந்தியாவின் நான்சி நான்சியிடம் 3 சுற்றுக்களிலும் கடும் தாக்குதலுக்கு முகங்கொடுத்து தோல்வி அடைந்தார். இந்தப் போட்டியில் கஜிந்தினி தோல்வி அடைந்த போதிலும், இம்முறை ஆசிய இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தவராக இடம்பிடித்தார் 

அதேபோல, வவுனியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான உதயகுமார் கீர்த்தனா, 54 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதியில் கஸக்ஸ்தான் வீராங்கனை துர்சின்பெக் அனாரிடம் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெண்கலப் பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டார்  

இந்த இரண்டு வீராங்கனைகளினதும் பயிற்சியாளராக முடியப்பு நிக்ஸன் ரூபராஜ் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

இதேவேளை, இம்முறை ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் (17 மற்றும் 18 வயது) குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் பிரபல கஸகஸ்தான் அணி, மிகச் சிறந்த முறையில் ஆடி இருபாலாரிலும் அதிக தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடிக்க, தஜிகிஸ்தான் மற்றும் கிரிகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 2ஆவது மற்றும 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டன. அதேபோல, இம்முறை போட்டித் தொடரை நடத்திய இலங்கை 6ஆவது இடத்தைப் பிடித்தது. 

இதனிடையே, இளையோர் பிரிவில் கஸகஸ்தானின் அலினா குடெய்ஜெனோவா சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாகவும், தஜிகிஸ்தானின் அபூபக்கர் கபுரோவ் சிறந்த குத்துச்சண்டை வீரராகவும் தெரிவாக, 22 வயதுக்குட்பட்ட பிரிவில் கஸகஸ்தானின் எலினா பஸாரோவா சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாகவும், கிரிகிஸ்தானின் மிர்ஸக்கிர் கொஷாலிவ் சிறந்த குத்துச்சண்டை வீரராகவும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.        

>> மேலும்பலவிளையாட்டுசெய்திகளைப்படிக்க <<