தென்னாபிரிக்காவை சுழலால் மிரட்டிய தனஞ்சய ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்

2417

சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளராக வளர்ந்து வரும் அகில தனஞ்சய வாழ்நாள் அதியுயர் புள்ளியை பெற்று மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவுக்கு வந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகக் கிண்ண இலங்கை அணியில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க

கிரிக்கெட் ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள ஆரம்ப துடுப்பாட்…

முதல் மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வீரர்கள் பிரகாசிக்க தவறிய நிலையில், தென்னாபிரிக்க அணி தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது. எனினும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் எழுச்சிபெற்ற இலங்கை அணி வெற்றிகளை தனதாக்கி, தொடரை 3-2 என மாற்றியது.

இதன்படி திறமைகளை வெளிக்காட்டிய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றங்களை கண்டுள்ளதுடன், சில வீரர்கள் பின்னடைவையும் சந்தித்துள்ளனர். தென்னாபிரிக்க அணியை தனது சுழல் பந்துவீச்சாள் மிரட்டிய அகில தனஞ்சய உட்பட அணித் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ், திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் பெரேரா ஆகியோர் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

இவர்களுடன் தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் ஜே.பி.டுமினி மற்றும் பந்து வீச்சாளர்களான ககிஸோ ரபாடா மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரும் முன்னேறியுள்ளனர். எனினும் தென்னாபிரிக்க அணியின் அனுபவ வீரர்களான பாப் டு ப்ளெசிஸ், ஹஷிம் அம்லா மற்றும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஆகியோர் சரிவினை சந்திக்க நேரிட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டியில் தனது தனிப்பட்ட சிறந்த பந்து வீச்சு பிரதியினை பதிவுசெய்த (29/6) அகில தனஞ்சய தனது வாழ்நாள் அதிகூடிய புள்ளியான 600 புள்ளிகளுடன் பந்து வீச்சாளர்கள் வரிசையில் 21 ஆவது இடத்தினை பிடித்துள்ளார். ஒருநாள் தொடர் நிறைவில் இவர், மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், தரவரிசையில் 22 இடங்கள் முன்னேறியுள்ளார்.

புதிய ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையின் அடிப்படையில், தரவரிசையில் இலங்கை அணி சார்பில் அதிகூடிய நிலையை பிடித்துள்ள வீரர் என்ற பெருமையையும் அகில தனஞ்சய பெற்றுக்கொண்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக நான்கு இடங்கள் பின்னடைவை சந்தித்துள்ள சுரங்க லக்மால் 28 ஆவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

அகில தனஞ்சயவுடன், தென்னாபிரிக்க அணி சார்பில் பந்து வீச்சு வரிசையில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய ககிஸோ ரபாடா ஒரு இடம் முன்னேறி 8 ஆவது இடத்தையும், சுழல் பந்துவீச்சாளர் தப்ரைஷ் சம்ஷி 6 விக்கெட்டுகளுடன் 47 இடங்கள் முன்னேறி 100 ஆவது இடத்தையும், 9 விக்கெட்டுகளை வீழ்த்திய என்டில் பெஹலுக்வாயோ 6 இடங்கள் முன்னேறி 52 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், அணி சார்பில் அதிகமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய லுங்கி என்கிடி 57 இடங்கள் முன்னேறி 88 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

துடுப்பாட்ட வரிசையில் தென்னாபிரிக்க அணி சார்பில் அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி, 5 போட்டிகளில் 56.75 என்ற சராசரியில் 227 ஓட்டங்களை குவித்த ஜே.பி.டுமினி, 11 இடங்கள் முன்னேறி 40 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளதுடன், மேலதிக நேர பந்து வீச்சாளராக செயற்பட்டு, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சகலதுறை வீரர்கள் வரிசையில் 10 இடங்கள் முன்னேறி 23 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

தோல்வியிலிருந்து மீண்டு வரும் இலங்கை அணிக்கு T-20 தொடர் எவ்வாறு அமையும்?

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்களுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்…

இவருடன் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 213 ஓட்டங்களை விளாசிய குயின்டன் டி கொக், தனது ஏழாவது இடத்தை தக்கவைத்துள்ள போதிலும், கடைசி இரண்டு போட்டிகளில் உபாதை காரணமாக வெளியேறிய அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் மூன்று இடங்கள் பின்னடைவை சந்தித்து, 11 ஆவது இடத்தையும், இலங்கை தொடரில் பிரகாசிக்க தவறிய ஹஷிம் அம்லா இரண்டு இடங்கள் குறைந்து (14) பின்னடைவை சந்தித்துள்ளார்.

இலங்கை அணி சார்பில் சகலதுறை வீரர்கள் பட்டியலில் திசர பெரேரா ஏழு இடங்கள் முன்னேற்றத்துடன், 25 ஆவது இடத்தையும், பந்து வீச்சாளர்கள் வரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 68 ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளார். அத்துடன் துடுப்பாட்ட வரிசையில் 16 இடங்கள் முன்னேற்றத்துடன் குசல் பெரேரா 66 ஆவது இடத்தையும், நான்கு இடங்கள் முன்னேறியுள்ள நிரோஷன் திக்வெல்ல 35 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், தொடரின் முடிவில் 78.33 என்ற சராசரியில் அதிகூடிய ஓட்டங்களை குவித்த (235) அஞ்செலோ மெத்திவ்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 25 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசியின் ஒருநாள் தரவரிசையில் விராட் கோஹ்லி, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் முறையே துடுப்பாட்ட வீரர், பந்து வீச்சாளர் மற்றும் சகலதுறை வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

இதேவேளை ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-2 என மாற்றத்துக்குள்ளாக்கியதால், அணிகளின் தவரிசையில் தென்னாபிரிக்க அணி மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 113 புள்ளிகளுடன் இருந்த தென்னாபிரிக்க அணி மூன்று புள்ளிகளை இழந்து 110 புள்ளிககளை பெற்றுள்ளதுடன், இலங்கை அணி 3 புள்ளிகளை பெற்று, 80 புள்ளிகளுடன் அதே எட்டாவது இடத்தில் நீடிக்கின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க