உலகக் கிண்ண தகுதிச்சுற்றில் ஆப்கானிடம் வீழ்ந்த உலக சம்பியன்

589

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடுவதற்கான இறுதி இரண்டு அணிகளைத் தெரிவு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ளன.

இந்த சுற்றுத் தொடரின் பிரிவில் மேற்கிந்திய தீவுகள், நேபாளம், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் ஐக்கிய அரபு இராட்சியம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஹொங்காங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

கிரிக்கெட் உலகை அபூர்வமாக்கிய ஆப்கான் – ஜிம்பாப்வே ஒரு நாள் தொடர்

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜிம்பாப்வேயில் …

இந்நிலையில் தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெறுகின்ற பயிற்சிப் போட்டிகள் நேற்று(27) ஆரம்பமாகியிருந்ததுடன், அதில் பெரும்பாலான போட்டிகள் மழையினால் தடைப்பட்டன.

இதன்படி, ஆப்கானிஸ்தான், நேபாளம், நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் வெற்றியைப் பதிவுசெய்தன. அதேவேளை, இரண்டு முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பிரபல மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அரபு இராட்சிய அணிகள் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தன.

ஹராரேயில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.  

எனினும், மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியானது 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 35 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணிக்காக குல்பதின் நைப் 48 ஓட்டங்களையும், சமிஉல்லாஹ் ஷின்வாரி 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று தமது தரப்பிற்கு வலுசேர்த்திருந்தனர்.

சுதந்திர கிண்ணத்தின் போது இலங்கை வரும் பாகிஸ்தான் மகளிர் அணி

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கான கிரிக்கெட் …

தொடர்ந்து டக்வர்த் லூவில் முறைப்படி 35 ஓவர்களில் 140 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதில் ஷிம்ரோன் ஹெட்மயர், ரோவ்மன் பவல் மற்றும் கார்லஸ் பரத்வைட் ஆகியோரின் விக்கெட்டுக்களை தன்னுடைய 5ஆவது ஓவரில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் தவ்லத் சத்ரான் ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 9 ஓட்டத்துடனும், சாய் ஹோப் ஒரு ஓட்டத்துடனும் ஏமாற்றம் கொடுத்தனர். ஆனால் அவ்வணிக்காக சற்று நிதானமாக விளையாடிய எவின் லீவிஸ்(36), மார்லன் சாமுவெல்ஸ்(34) ஆறுதல் கொடுத்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 26.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அவ்வணி தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தானின் தவ்லத் சத்ரான் 4 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் மற்றும் சரபுத்தீன் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்ஹர் ஸ்டானிக்ஸ்சாய், வயிற்று உபாதை காரணமாக உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியிலிருந்து விலகியுள்ளதால் அவ்வணியின் தலைவராக 19 வயதான இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானை நியமிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் முதல்தடவையாக விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட நேபாள அணி, ஐக்கிய அரபு இராட்சிய அணியையும், நடப்புச் சம்பியன் நெதர்லாந்து அணி ஹொங் கொங்கையும், ஸ்கொட்லாந்து அணி பபுவா நியூகினியாவையும் வெற்றி கொண்டதுடன், போட்டிளை நடாத்தும் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.