ஆசியக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு

Men's Asia Cup 2025

28
Afghanistan squad for Asia Cup 2025 announced

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடருக்கான ரஷீத் கான் தலைமையிலான 17 பேர் கொண்ட பலமிக்க ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான், மொஹமட் நபி, நூர் அஹ்மட், அல்லாஹ் கசன்பர் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் என ஐந்து பிரபல சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஆடுகளங்களுக்கு இவர்களது பந்துவீச்சு எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வரிசையப் பொறுத்தமட்டில் அதன் அச்சாணியாக தர்விஷ் ரசூலி மற்றும் செடிக்குல்லாஹ் அடல் ஆகியோர் இருப்பர். அதிரடி வீரர் ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் மற்றும் மொஹமட் இஷாக் ஆகியோர் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணியில் 40 வயதான மொஹமட் நபி இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கவுள்ளது. அவருடன் சேர்ந்து அஸ்மதுல்லாஹ் ஒமர்ஜாய், கரீம் ஜன்னத் மற்றும் குல்படீன் நைப் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வேகப் பந்துவீச்சு வரிசையை பொறுத்தமட்டில் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் பசல்ஹக் ஃபாரூகி முன்னின்று வழிநடத்துவார். அவருடன் நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபரீத் அஹ்மட் மாலிக் ஆகியோரும் வேகப் பந்துவீச்சை பலப்படுத்தவுள்ளார்கள். இதனிடையே, வாஃபியுல்லாஹ் தராகில், நங்கியலியா கரோட்டி, அப்துல்லாஹ் அஹ்மட்சாய் ஆகிய மூவரும் காத்திருப்பு வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இம்முறை ஆசியக் கிண்ணத்தில் B பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் தனது முதல் போட்டியில் செப்டம்பர் 9ஆம் திகதி ஹொங்காங் அணியை சந்திக்கவுள்ளது.

இதேவேளை, ஆசியக் கிண்ணத் தொடருக்கு ஆரம்பமாவதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி இந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பாகிஸ்தானுடன் முத்தரப்பு T20I தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் ஆசியக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆசியக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் அணி விபரம்:

 

ரஷீத் கான் (தலைவர்), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரான், தர்விஷ் ரசூலி, செடிக்குல்லாஹ் அடல், அஸ்மதுல்லாஹ் ஒமர்ஜாய், கரீம் ஜன்னத், மொஹமட் நபி, குல்படீன் நைப், ஷரஃபுதீன் அஷ்ரஃப், மொஹமட் இஷாக், நூர் அஹ்மட், முஜீப் உர் ரஹ்மான், ஏஎம் கஜன்ஃபார், ஃபரீத் அஹ்மட் மாலிக், ஃபசல்ஹக் ஃபாரூகி, நவீன் உல் ஹக்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<