இலங்கையில் இம்மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த வளர்ந்து வரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க ஆசிய கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் சிக்குன்குனியா நோய் பரவல் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் குறித்த தொடரை ஒத்திவைக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல மேற்கொண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தைககுப் பிறகு, வளர்ந்து வரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்று (02) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த ஆசிய கிரிக்கெட் பேரவை;யின் தலைவர் மொஹ்சின் நக்வி, ‘இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், உயர் மட்டத்தில் விளையாடவும் வாய்ப்பளிப்பதில் ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிபூண்டுள்ளது. ஆசிய பெண்கள் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தப் போட்டித் தொடரின் மூலோபாய முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். விரைவில் இந்தப் போட்டியை மீண்டும் நடத்துவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம்.’ என தெரிவித்தார்.
- அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைப்பு
- ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம் முதல் தடவையாக இலங்கையில்
2-வது வளர்ந்து வரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. இதில் நடப்புச் சம்பியன் இந்தியா, இலங்கை, பங்காளதேஷ், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், ஹாங்காங் மற்றும் மலேசியா ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ள இருந்தன.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற அங்குரார்ப்பண வளர்ந்து வரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, மேஜர் கழகங்களுக்கிடையிலான T20 தொடரை நாளை மறுநாள் (05) மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கழகங்களுக்கிடையிலான Tier B T20 தொடர் நேற்று (02) ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<