19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் இளையோர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை இளம் அணி தொடரில் இந்த சுற்றில் தமது முதல் போட்டியினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
>>அவுஸ்திரேலிய இளையோர் அணியிடம் இலங்கை படுதோல்வி
சுப்பர் சிக்ஸ் சுற்றின் குழு 1 அணிகளான ஆப்காகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான போட்டி முன்னதாக நமீபியாவின் விண்ட்ஹோக் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளம் அணி, முதலில் பந்துவீச்சினை தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
இதனால் ஆப்கானிஸ்தான் இளம் வீரர்கள் 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஒஸ்மான் சதாட் 61 ஓட்டங்களையும், அசிசுல்லா மியாகில் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் குகதாஸ் மாதுளன் மற்றும் விரான் சாமுதித ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
பின்னர் 194 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 46.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கினை அடைந்து கொண்டது.
இலங்கை அணி சார்பாக செனுஜ வெக்குனகொட 43 ஓட்டங்களை எடுக்க, திமன்த மஹாவிதான 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ஆப்கான் பந்துவீச்சில் ரூஹூல்லாஹ் அரப் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கைத் தரப்பின் சாமிக ஹீனட்டிகல தெரிவானார்.




















