முக்கிய வேகப்பந்துவீச்சாளரை உலகக் கிண்ணத்தில் இழக்கும் நியூசிலாந்து

ICC T20 World Cup 2026

6
ICC T20 World Cup 2026

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்னே இடது காலில் ஏற்பட்ட தசை உபாதையின் காரணமாக நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

>>இலங்கை – இங்கிலாந்து ஒருநாள் தொடர்; முதல் போட்டியில் இலங்கை த்ரில் வெற்றி<<

ஜனவரி 18ஆம் திகதி தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 தொடரில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடியபோது அவருக்கு உபாதை ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக ஏற்கனவே அணியின் மேலதிக வீரராக இருந்த கைல் ஜேமிசன் நியூசிலாந்தின் T20 உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரம் ஜேமிசனின் இடத்திற்கு மற்றொரு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி தற்போது பல வீரர்களின் காயங்களால் தடுமாறி வருகின்றது. வில் ஓரூர்க்கே, ப்ளையர் டிக்னர், நேதன் ஸ்மித் மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோர் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடி வரும் மிச்சல் சான்ட்னர், மார்க் சாப்மேன் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் சமீபத்தில் தான் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியமை சுட்டிக்காட்டத்தக்கது. அதேவேளை உலகக் கிண்ண அணியில் உள்ள லோக்கி பெர்குஸன் தற்போது கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு வருவதால் இந்தியாவுடனான தொடரில் பங்கேற்கவில்லை.

மில்னேவின் உபாதை குறித்து கருத்து வெளியிட்ட நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் ரொப் வோல்டர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“அடம் மில்னேவிற்காக நாங்கள் அனைவரும் வருந்துகிறோம். இந்தத் தொடருக்காக அவர் கடினமாக உழைத்திருந்தார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்.”

T20 உலகக் கிண்ணத்திற்கான தற்போதைய நியூசிலாந்து குழாம்:

மிச்சல் சான்ட்னர் (தலைவர்), பின் அலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கொன்வே, ஜேக்கப் ட(f)ப்பி, லக்கி பெர்குஸன், மேட் ஹென்ரி, கைல் ஜேமிசன், டேரைல் மிச்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்பார்ட், இஷ் சோதி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<