தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் தலைவராக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெம்பா பவுமா தலைமையிலான கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. அடுத்ததாக, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
முதலாவது போட்டி வரும் 30ஆம் திகதி ராஞ்சியிலும், 2ஆவது போட்டி, டிசம்பர் 3ஆம் திகதி ராய்ப்பூரிலும், 3ஆவது போட்டி டிசம்பர் 6ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறவுள்ளன. பின்னர் 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நடைபெறும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைவராக இருந்த சுப்மன் கில், கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரிலும் இடம்பெறவில்லை.
அவருக்குப் பதிலாக புதிய தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். ராகுல் ஏற்கனவே இந்திய அணியில் பல போட்டிகளில் வழி நடத்தி உள்ள நிலையில் தற்போது மீண்டும் அந்தப் பதவி கிடைத்திருக்கிறது. அவர், கடந்த 2022-23 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக 12 போட்டிகளில் பணியாற்றி உள்ளார். அதன் பின், சுப்மன் கில்லின் வரவால், தலைவர் பொறுப்பை அவருக்கு இழக்க நேரிட்டது.
- இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவராக சுப்மன் கில் நியமனம்
- இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தென்னாபிரிக்க அணியில் ன்கிடி
- இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ரிஷப் பண்ட்
அதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. இதனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரிஷப் பண்ட், ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைத்திருக்கிறது.
அது மட்டுமில்லாமல் அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மாவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு, அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சகலதுறை வீரர்களாக நிதீஷ் குமார் ரெட்டியும், வொஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித்ராணா, பிரசித் கிருஷ்ணா, ஆர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மேலதிக விக்கெட் காப்பாளராக துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, ஒருநாள் தொடரில் மொஹமட் சமி சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது விக்கெட் காப்பாளராக சஞ்சு சாம்சன் இடம்பெறலாம் என நினைக்கப்பட்ட நிலையில், அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. நட்சத்திர வீரர்களான பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய ஒருநாள் குழாம் விபரம்
கே.எல்.ராகுல் (தலைவர்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), வொஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, ருதுராஜ் கெயிக்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















