சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை அணியானது இரண்டாம் இன்னிங்ஸில் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
நேற்று (07) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் இலங்கையின் முதல் இன்னிங்ஸை (257) அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியானது 330 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. ஆஸி. அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நம்பிக்கை வழங்கிய ஸ்டீவ் ஸ்மித் 120 ஓட்டங்களையும், அலெக்ஸ் கெரி 139 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இன்று (08) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த அவுஸ்திரேலிய வீரர்கள் பிரபாத் ஜயசூரியவின் சுழலினை எதிர்கொள்ள தடுமாறி 106.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 414 ஓட்டங்கள் எடுத்தனர். அவுஸ்திரேலிய தரப்பின் துடுப்பாட்டம் சார்பாக அதிகபட்சமாக அலெக்ஸ் கெரி 156 ஓட்டங்கள் எடுக்க, ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய 36ஆவது சதத்தோடு 131 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 151 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நிஷான் பீரிஸ் 3 விக்கெட்டுக்களையும் ரமேஷ் மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
பின்னர் இலங்கை 157 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தது. இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸிலும் முன்வரிசை வீரர்கள் சொதப்பலாக செயற்பட்டிருந்தனர்.
எனினும் அஞ்செலோ மெதிவ்ஸ் சற்று நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்த இலங்கை அணியானது இன்னிங்ஸ் தோல்வியினை தவிர்த்தது. எனினும் அஞ்செலோ மெதிவ்ஸ் தனது விக்கெட்டினை நதன் லயனிடம் 76 ஓட்டங்களுடன் பறிகொடுத்தார். இதன் பின்னர் மீண்டும் சரிவினை எதிர்கொண்ட இலங்கை அணியானது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் 211 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
இலங்கை அணி அவுஸ்திரேலியாவினை விட 54 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலை பெற்றிருக்க களத்தில் ஆட்டமிழக்காது நம்பிக்கை தரும் குசல் மெண்டிஸ் 48 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக மெதிவ் குஹ்னமேன் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நதன் லயன் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.