T20 போட்டியில் 15 ஓட்டங்கள் ; வரலாற்றில் மிக மோசமான சாதனை!

Big Bash League 2022-23

337
Sydney Thunder bowled out for 15 by Adelaide Strikers

அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்துள்ள பிக் பேஷ் லீக்கின் 5வது போட்டியில் விளையாடிய சிட்னி தண்டர்ஸ் அணி T20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையொன்றை பதிவுசெய்துள்ளது.

சிட்னி சோவ்கிரவ்ண்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் அடிலய்ட் ஸ்ரைக்கர் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

>> டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் அஷார் அலி!

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ரைக்கர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கிரிஸ் லின் 36 ஓட்டங்களையும், கொலின் டி கிரெண்டோம் 33 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றுக்கொண்டனர்.

பின்னர் 140 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி 5.5 ஓவர்கள் மாத்திரமே துடுப்பெடுத்தாடியதுடன் 15 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களால் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.

அடிலய்ட் ஸ்ரைக்கர் அணியின் முதல் ஓவரை வீசிய மெதிவ் ஷோர்ட் ஒரு விக்கெட்டினை கைப்பற்ற, அடுத்த ஓவரை வீசியி ஹென்ரி தொர்ன்டன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்த ஓவரை வீசிய வெஸ் ஏகர் 2 விக்கெட்டுகளை வீழ்த்த முதல் 3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ஹென்ரி தொர்ன்டன் தன்னுடைய இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட்டையும், வெஸ் ஏகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, தன்னுடைய மூன்றாவது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஹென்ரி தொர்ன்டன் சிட்னி தண்டர்ஸ் அணியை 15 ஓட்டங்களுக்குள் சுருட்டினார். ஹென்ரி தொர்ன்டன் மொத்தமாக 5 விக்கெட்டுகளையும், வெஸ் ஏகர் 4 விக்கெட்டுகளையும், மெதிவ் ஷோர்ட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

சிட்னி தண்டர்ஸ் அணியின் இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஆண்கள் தொழில்முறை T20 போட்டிகளில் பெறப்பட்ட குறைந்த ஓட்டம் என்ற மிக மோசமான சாதனையை பதிவுசெய்தது. இதற்கு முதல் செக்குடியரசு அணிக்கு எதிராக துருக்கி அணி 19 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தமையே மிக மோசமான சாதனையாக அமைந்திருந்தது.

குறிப்பிட்ட இந்தப்போட்டியை பொருத்தவரை 5 துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்திருந்ததுடன், T20 உலகக்கிண்ண சம்பியன்களான இங்கிலாந்து அணியில் விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், அவுஸ்திரேலியாவின் கிரிஸ் கிரீன், டேனியல் சேம்ஸ் மற்றும் தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ரெய்லி ரொசோவ் ஆகியோர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<