அரைச்சதங்களுடன் ஜொலித்த இலங்கை இளம் கிரிக்கெட் அணியின் பின்வரிசை

149

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் (U19) கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இளையோர் டெஸ்ட் போட்டி, இலங்கை இளம் கிரிக்கெட் அணியின் பிரம்மாண்டமான முதல் இன்னிங்ஸை அடுத்து சமநிலை அடைந்துள்ளது.

டேனியலின் அபார சதத்துடன் பலம் பெற்ற இலங்கை

டேர்பி நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை (30) நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை இளம் கிரிக்கெட் அணி 480 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த ரவீன் டி சில்வா 65 ஓட்டங்களையும், துவின்து ரணதுங்க ஒரு ஓட்டத்தினையும் பெற்றிருந்தனர்.

இதனையடுத்து போட்டியின் நான்காம் நாளில் நேற்று (31) இங்கிலாந்தை விட 99 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை இளையோர் அணி அதன் தலைவர் ரவீன் டி சில்வா, பின்வரிசை வீரர்களான வினுஜ ரன்புல், துவின்து ரணதுங்க ஆகியோரின் அரைச்சத உதவிகளோடு முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இமாலய ஓட்டங்களான 542 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை இளையோர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரவீன் டி சில்வா 7 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 74 ஓட்டங்கள் எடுக்க, வினுஜ ரன்புல் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார். இவர்கள் தவிர துவின்து ரணதுங்க 8 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 54 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பந்துவீச்சில் யூசேப் மஜித் 3 விக்கெட்டுக்களையும், பேர்டி போர்மன் மற்றும் பென்ஜமின் கிளிப்(f) ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சுருட்டியிருந்தனர்.

இலங்கை அணியில் உலகத்தரமிக்க பந்துவீச்சாளர்கள் இல்லை

பின்னர் இலங்கையை விட 161 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த, இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி, போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்து போட்டி சமநிலை அடையும் போது 249 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் பென் மெக்கினி அரைச்சதம் விளாசி 74 ஓட்டங்கள் பெற்றிருக்க, அரைச்ததம் விளாசிய ரோஸ் விட்பீல்ட் 63 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதேநேரம் இலங்கை பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் ரவீன் டி சில்வா 3 விக்கெட்டுக்களையும், செவோன் டேனியல் மற்றும் வனுஜ சஹான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதமும் சுருட்டியிருந்தனர்.

இப்போட்டி சமநிலை அடைந்ததனை அடுத்து இரு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரினை இலங்கை 1-0 என கைப்பற்றிக் கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<