“தேர்வுக்குழுவின் இளம் வீரர்கள் கொள்கை வீணடையவில்லை” – பிரமோதய

Sri Lanka tour of Bangladesh 2021

144

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி விளையாடிய விதம், தேர்வுக்குழுவின் இளம் வீரர்களுடன் செல்லும் கொள்கையை நியாயப்படுத்தியுள்ளதாக, பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இலங்கை அணி 2-1 என தோல்வியடைந்தது. எனினும், இறுதி ஒருநாள் போட்டியில் மூன்று அறிமுக வீரர்களுடன் விளையாடிய இலங்கை அணி சிறந்த வெற்றியை பதிவுசெய்தது.

இலங்கை அணியின் தேர்வு குறித்து டில்ஷான், சனத் அதிருப்தி

இந்தநிலையில், இளம் வீரர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை, பங்களாதேஷில் சரியாக வெளிப்பட்டதாக, தேர்வுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க “டெய்லி நியூஸிடம்” தெரிவித்தார்.

நாம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், மூன்று புதுமுக வீரர்களுடன் விளையாடினோம். குறித்த போட்டியில் தோல்வியடைந்திருந்தால், தேர்வுக்குழு விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும். நாம் எப்போதும், 2023 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டு, இளம் வீரர்கள் கொள்கையை கையாளுகிறோம். அதேநேரம், அனுபவ வீரர்களை மறக்கவில்லை என்றார்.

அதேநேரம், சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இளம் வீரர்களுக்கு போட்டிகளில் விளையாடும் பயிற்சிகளையும் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

நாம் இளம் வீரர்களுக்கு போட்டியில் விளையாடும் அனுபவங்களை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு அனுபவம் கிடைக்காது. எங்களுக்கு ஒரு தெளிவான பார்வை இருக்கிறது. எங்களுடைய கட்டமைப்பில் யாரும் தலையிடாத வரை அதை நிறைவேற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அத்துடன், இலங்கையில் தற்போதுள்ள இளம் வீரர்களுடன் பங்களாதேஷில் விளையாடினோம். நாம், அவர்களுக்கான வாய்ப்பை எப்படியும் கொடுக்க வேண்டும். வாய்ப்பினை யாராவது அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க முடியாது. எமது பிரதான இலக்கு 2023 உலகக் கிண்ணம் ஆகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்களாதேஷ் தொடரை நிறைவுசெய்துள்ள இலங்கை அணி, இம்மாதம் இங்கிலாந்துக்கு பயணிக்கவுள்ளது. குறித்த தொடருக்கான இலங்கை அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…