வெற்றியை நெருங்கியிருக்கும் இலங்கை A கிரிக்கெட் அணி

753

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணிகள் ஆகியவற்றுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றுவரும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், இலங்கை A அணி மிலிந்த சிறிவர்தன, கமிந்து மெண்டிஸ், லசித் அம்புல்தெனிய மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோரின் திறமையான ஆட்டத்தோடு வெற்றியை நெருங்கியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து A அணி தமது சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக இலங்கை A அணியுடன் விளையாடும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நேற்று (5) ஆரம்பமாகியிருந்தது.

இலங்கை A அணிக்காக கலக்கிய மொஹமட் சிராஸ்

நான்கு நாட்கள் கொண்ட இப்போட்டியில், நேற்று முதலில் துடுப்பாடிய அயர்லாந்து A அணி 153 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது முதல் இன்னிங்சை முடித்திருந்தது. இதன் பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை A அணி 185 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து வலுவாக காணப்பட்டிருந்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் நின்றிருந்த மிலிந்த சிறிவர்தன 73 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 64 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்று (6) போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை A அணிக்கு, நான்காம் விக்கெட்டுக்காக மிலிந்த சிறிவர்த்தன – கமிந்து மெண்டிஸ் ஜோடி மிகப்பெரிய பெரிய இணைப்பாட்டம் (187) ஒன்றை பெற்றுத்தந்தது.

>>Photos : Ireland A Team Tour to Sri Lanka 2018/19 – 1st Four Day Game – Day 2<<

எனினும், இந்த இணைப்பாட்டத்தை அயர்லாந்து A அணியின் இடதுகை சுழல் வீரர் ஜேம்ஸ் கெமரூன் டோவ் தகர்த்தார். அதனை தொடர்ந்தும் கெமரூன் டோவினுடைய பந்துவீச்சிற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை A அணி தமது முதல் இன்னிங்சுக்காக 77.1 ஓவர்களில் 308 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் மிலிந்த சிறிவர்தன சதம் ஒன்றுடன் 126 பந்துகளில் 13 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 104 ஓட்டங்களை பெற்றிருக்க, கமிந்து மெண்டிஸ் 13 பெளண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களைப் குவித்திருந்தார்.

இதேநேரம் அயர்லாந்து A அணியின் பந்துவீச்சு சார்பில் அபாரம் காட்டிய ஜேம்ஸ் கெமரூன் டோவ் 77 ஓட்டங்களை மட்டும் விட்டுத்தந்து 7 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

இதன் பின்னர், இலங்கை A அணியை விட 155 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அயர்லாந்து A அணி லசித் அம்புல்தெனிய மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சு காரணமாக தடுமாற்றமான ஆட்டத்தை காண்பித்ததோடு, போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்சுக்காக 182 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை A அணியினை விட வெறும் 27 ஓட்டங்களினாலேயே முன்னிலை பெற்றிருக்கின்றது.

திசர பெரேராவை பாராட்டும் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள்

இவ்வாறாக அயர்லாந்து A அணி ஒரு விக்கெட் மாத்திரமே எஞ்சிய நிலையில் 27 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருப்பது இலங்கை A அணிக்கு போட்டியின் வெற்றி வாய்ப்பினை அதிகமாக்கியிருக்கின்றது.

அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் ஷன்னோன் 32 ஓட்டங்களுடன் அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, இலங்கை A அணியின் பந்துவீச்சில் ஜொலித்த லசித் அம்புல்தெனிய 68 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், மொஹமட் சிராஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

ஸ்கோர் விபரம்

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<