மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த திசர பெரேரா ; போராட்டம் வீண்

3754
AFP

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையில்,  பேய் ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேராவின் அதிடியையும் தாண்டிய நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் த்ரில் வெற்றிபெற்றுள்ளது. அத்துடன், ஒருநாள் தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது.

தொடரை தக்க வைக்க இலங்கையின் போராட்டம் எவ்வாறு அமையும்?

இலங்கை – நியூசிலாந்து அணிகள்…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி கொலின் மன்ரோ, ஜேம்ஸ் நீஷம் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோரின் அபார ஆட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி திசர பெரேராவின் கன்னி சதம் மற்றும் தனுஷ்க குணதிலக்கவின் அரைச்சதம் அடங்கலாக 298 ஓட்டங்களை பெற்று, 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரையில், முதல் போட்டியில் சதமடித்திருந்த மார்ட்டின் கப்டில், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோரது விக்கெட்டுகள் போட்டியின் முதல் 10 ஓவர்களுக்குள் வீழ்த்தப்பட்டது. எனினும், கொலின் மன்ரோ மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கி, ஓட்டங்களை குவித்தனர்.

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்களை பகிர்ந்தனர்.  இதில் கொலின் மன்ரோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, குசல் பெரேராவின் சிறந்த களத்தடுப்பின் மூலமாக ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்தும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் அரைச்சதம் கடக்க, இதற்கு அடுத்தப்படியாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோலஸ், 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, 90 ஓட்டங்களை பெற்றிருந்த ரோஸ் டெய்லர் துரதிஷ்டவசமாக ரன்அவுட் மூலமாக ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் ஜேம்ஸ் நீஷம் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களை பெற்று, ரன்அவுட் மூலமாக ஆட்டமிழக்க, இறுதியாக தனது பங்கிற்கு டீம் செய்பர்ட் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 319 ஆக உயர்த்தினார். இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, லசித் மாலிங்க 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

Video – மெதிவ்ஸின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – Cricket Kalam 05

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு…

பின்னர், சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி திசர பெரேராவின் அதிரடி கன்னி சதத்தின் உதவியுடன், வெற்றியிலக்கை நெருங்கியிருந்த போதும், துரதிஷ்டவசமாக 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 320 ஓட்டங்களை நோக்கிய இலங்கை அணி, 22 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், 298 ஓட்டங்களை பெற்று, 21 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல 9 ஓட்டங்களுடனும், குசல் பெரேரா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தனர். எனினும், சிறப்பாக ஓட்டங்களை குவித்த தனுஷ்க குணதிலக்க நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிக்கப்பட, குணதிலக்க அரைச்சதம் கடந்தார்.

அரைச்சதம் கடந்த தனுஷ்க குணதிலக்க 71 ஓட்டங்களுடன் வெளியேறிய நிலையில், இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களில் குசல் மெண்டிஸ் மாத்திரம் 20 ஓட்டங்களை பெற, தினேஷ் சந்திமால், அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஏமாற்றியிருந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 128 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்திருந்தது.

எவ்வாறாயினும், இறுதியாக களமிறங்கி அதிரடியை வெளிக்காட்டிய திசர பெரேரா, இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்திருந்தார். வெறும் 57 பந்துகளில் தனது கன்னி ஒருநாள் சதத்தை கடந்த திசர பெரேரா, மொத்தமாக 74 பந்துகளில் 13 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 140 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். இவரது ஆட்டமிழப்புடன் சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 21 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. பந்து வீச்சில் இஸ் சோதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கையுடனான டி20 போட்டிக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள…

திசர பெரேரா இறுதிக்கட்டத்தில் மாலிங்கவுடன் 75 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பகிர்ந்ததுடன், சந்தகனுடன் 51 ஓட்டங்களையும், நுவான் பிரதீப்புடன் 44 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தார். அதுமாத்திரமின்றி இன்றைய போட்டியில் 13 சிக்ஸர்களை விளாசிய இவர், இலங்கை அணி சார்பில் ஒருநாள் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய 11 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

அத்துடன், திசர பெரேரா சனத் ஜயசூரியவின் மற்றுமொரு சாதனையையும் சமப்படுத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை விளாசிய இலங்கை வீரர் என்ற சாதனையை சமப்படுத்தியுள்ளார். சனத் ஜயசூரிய 1994ம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 140 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், அந்த சாதனை திசர பெரேராவால் இன்று சமப்படுத்தப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், இன்றைய போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<