நியூசிலாந்து அணிக்கு எதிராக கிரிஸ்ட்ச்சேர்ச்சில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய நான்காவது நாள் ஆட்ட நேர நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மெதிவ்ஸ்
நியூசிலாந்தின் கிரிஸ்ட்ச்சேர்ச்சில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடிய, இலங்கை அணியின்……
நேற்றைய ஆட்ட நேர நிறைவின் போது, 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இலங்கை அணி ஆட்டத்தை ஆரம்பித்தது. குசல் மெண்டிஸ் மற்றும் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை சேர்த்து வந்தனர். இதில், குசல் மெண்டிஸ் இவ்வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இவ்வாறு, நேர்த்தியான துடுப்பாட்டத்தின் மூலம் இருவரும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தி வர, குசல் மெண்டிஸ் அரைச்சதம் கடந்தார். இவரின் அரைச்சதத்தின் உதவியுடன், இலங்கை அணி மதிய போசன இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மதியபோசன இடைவேளைக்கு பின்னர், நெயில் வெங்கரின் பந்து வீச்சில், குசல் மெண்டிஸ் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மெண்டிஸ் மற்றும் சந்திமால் ஜோடி மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக 117 ஓட்டங்களை பகிர்ந்திருந்தது. இதன் பின்னர், சந்திமாலுடன் ஜோடி சேர்ந்த மெதிவ்ஸ் அணிக்கான ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினார். இதில், 67வது ஓவரில் மெதிவ்ஸின் தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட, உடற்பயிற்சி நிபுணர் மெதிவ்ஸிற்கு சிகிச்சை அளித்தார்.
உடற்பயிற்சி நிபுணரின் சிகிச்சைக்கு பின்னர் மெதிவ்ஸ் உபாதையுடன் துடுப்பெடுத்தாட, தினேஷ் சந்திமால் அரைச்சதம் கடந்து அணியை முன்னோக்கி அழைத்துச் சென்றார். இருவரும் தங்களுடைய விக்கெட்டுகளை பாதுகாத்துக்கொள்ள, தேநீர் இடைவேளையின் போது இலங்கை அணி, 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தேநீர் இடைவேளையின் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, புதிய மாற்றத்துடன் களமிறங்கியது. உபாதைக்குள்ளாகிய மெதிவ்ஸிற்கு பதிலாக, ரொஷேன் சில்வா களமிறங்கினார். இன்றைய ஆட்டத்தின் இரண்டு பாதிகளை இலங்கை அணி கைவசப்படுத்தியிருந்த போதும், கடைசிப் பாதியை நியூசிலாந்து அணி தங்கள் வசப்படுத்தி, முக்கிய விக்கெட்டுகளை பதம் பார்த்தது.
இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து
நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய…….
தினேஷ் சந்திமால் 56 ஓட்டங்களுடன், நெயில் வெங்கரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்ப, அடுத்து வந்த நிரோஷன் டிக்வெல்ல 19 ஓட்டங்களுடனும், ரொஷேன் சில்வா 18 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இதன் காரணமாக இலங்கை அணி, 208 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. எனினும், சற்று நிலைத்து துடுப்பெடுத்தாடி வரும் டில்ருவான் பெரேரா 22 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 16 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற, இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 231/6 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை பொருத்தவரை, நெயில் வெங்கர் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், டீம் சௌதி 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமானால் 4 விக்கெட்டுகள் கைவமிருக்க 429 ஓட்டங்களை பெறவேண்டும் என்பதுடன், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் மாத்திரமே தேவைப்படுகிறது.
போட்டி சுருக்கம்