மகளிர் T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை

538
Courtesy - ICC

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், நேற்று (16) நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி, தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை நீடித்திருந்தது. இதன்படி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் கட்டாய வெற்றிபெற்றால் மாத்திரமே அரையிறுதி என்ற நிலையில் கிரோஸ் இஸ்லேட் (Gros Islet) மைதானத்தில் இலங்கை அணி களமிறங்கியது.

மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு முதல் தோல்வி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20I உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (10) நடைபெற்ற…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப ஜோடி முதல் விக்கெட்டுக்காக 94 ஓட்டங்களை குவிக்க, அடுத்து வந்த அணித் தலைவி ஸ்டெப்னி டெய்லர் 41 ஓட்டங்களை விளாச, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதிரடியாக துடுப்பாடிய ஹெய்லி மெதிவ்ஸ் 36 பந்துகளில் 62 ஓட்டங்களை விளாசியதுடன், தேந்திரா டொட்டின் 49 ஓட்டங்களை பெற்று, அரைச்சதத்தை தவறவிட்டிருந்தார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் ஓசாதி ரணசிங்க, உதேசிகா பிரபோதனி மற்றும் சஷிகலா சிறிவர்தன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து அரையிறுதிக்கான கனவுடன், கடினமான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை மகளிர் அணியை, ஓட்ட எண்ணிக்கையை சற்றும் நெருங்க விடாத வகையில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி பந்துவீசியது. இதன் அடிப்படையில் 17.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 83 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணிக்காக கடுமையாக போராடிய அணித் தலைவி சமரி அட்டபத்து 44 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய வீராங்கனைகள் அணிக்கு தேவையான ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க தவறியிருந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, துடுப்பாட்டத்தில் அசத்திய ஹெய்லி மெதிவ்ஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்ட நாயகியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

முதல் வெற்றியுடன் அரையிறுதிக்கான எதிர்பார்ப்பை நீடித்துள்ள இலங்கை மகளிர் அணி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20I உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இன்று (15)…

இம்முறை நடைபெற்று வரும் மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை பொருத்தவரை இலங்கை மகளிர் அணி துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறியிருந்தது. தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் இலங்கை அணி குறைந்த ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்திருந்தது. முக்கியமாக இந்தப் போட்டியில் பெற்ற 104 என்ற ஓட்ட எண்ணிக்கையே இலங்கையின் அதிகபட்ச ஓட்டமாகவும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு, துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறியமையே இலங்கை அணியின் T20 உலகக்கிண்ண தொடர் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. இதேவேளை, இன்றைய போட்டியி்ல் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் A குழுவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளன. அத்துடன், குறித்த அணிகளுக்கு இன்னுமொரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், இலங்கை அணியின் சகல போட்டிகளும் நிறைவுற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<