இசுறு உதானவின் அதிரடியுடன் இறுதிப்போட்டிக்கு நுழைந்த தம்புள்ளை

711

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் SLC T-20 லீக்கின் இன்றைய இறுதி லீக் போட்டியில் கொழும்பு அணியை வீழ்த்திய தம்புள்ளை அணி, 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தக்கவைத்துள்ளது.

SLC T-20 கிரிக்கெட் தொடரின் இறுதி லீக் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தம்புள்ளை அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

தசுன் சானக்கவின் அதிரடி சதத்தோடு கண்டி அணிக்கு ஆறுதல் வெற்றி

அணியின் முதல்வரிசை துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணதிலக, ரமித் ரம்புக்வெல்ல, ஹசித போயாகொட மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தம்புள்ளை அணி எதிர்பார்ப்பை இழந்த நிலையில் துடுப்பெடுத்தாடியது.

இதனையடுத்து களமிறங்கிய இசுறு உதான மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் மெதுவாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். தம்புள்ளை அணி 17 ஓவர்கள் நிறைவில் வெறும் 96 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், 6 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. எனினும் இறுதி மூன்று ஓவர்களில் இசுறு உதான அதிரடியை வெளிப்படுத்த, தம்புள்ளை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்றது.

இசுறு உதான ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 25 பந்துகளுக்கு 41 ஓட்டங்களையும், வனிது ஹசரங்க 33 பந்துகளுக்கு 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். கொழும்பு அணியின் பந்து வீச்சு சார்பாக ஜீவன் மெண்டிஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொழும்பு அணி, 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய பிரியமல் பெரேரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் விக்கெட்டுகள் எதிரணியால் அடுத்தடுத்து சரிக்கப்பட்டது.

பிரியமல் பெரேரா 46 ஓட்டங்களுக்கு துரதிஷ்டவசமாக ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க, கொழும்பு அணியின் வெற்றிக்கான கதவுகள் மூடப்பட்டன. ஆனால் இறுதியாக களமிறங்கிய சம்மு அஷான் எதிரணியின் பந்து வீச்சை பதம் பார்க்க போட்டி விறுவிறுப்பாகியது. 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்களை விளாசிய இவர், ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க, கொழும்பு அணி இறுதிவரை போராடி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை பெற்று, 5 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்டது. தம்புள்ளை அணிசார்பில் அமில அபோன்சோ 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொழும்பு அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே தக்கவைத்திருந்ததுடன், தம்புள்ளை அணி இன்றைய தினம் தங்களது இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெற்றிருந்தது. இதனடிப்படையில் குறித்த இரண்டு அணிகளும் எதிர்வரும் 2 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

ஸ்கோர் விபரம்

 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<