தென் கொரியா, ஜியோனுவில் இன்று நடைபெற்ற 10ஆவது ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில், மூன்றாவது இடத்துக்கான விறுவிறுப்பான போட்டியில் இலங்கை அணியை 58-49 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டி மூன்றாவது இடத்தை ஹொங்கொங் அணி தக்க வைத்துக்கொண்டது.

குழு மட்ட போட்டிகளில் ஹொங்கொங் அணியை 60-45 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டி இருந்த இலங்கை அணி, மூன்றாவது இடத்துக்கான நொக் அவுட் போட்டியில் தோல்விகண்டது. அதேவேளை மறுமுனையில், சிறந்த தடுப்பாட்டத்துடன் விளையாடிய ஹொங்கொங் அணி இம்முறை வெற்றியை உறுதி செய்து கொண்டது.

தீர்மானம்மிக்க அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வென்றது சிங்கப்பூர்

2015ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்த இலங்கை அணியை அரையிறுதிப் போட்டியில், 58-32 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. அதேவேளை, மலேசிய அணி 70-40 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹொங்கொங் அணியை வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது.

விறுவிறுப்பான முதல் கால் பகுதியில் 12-11 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹொங்கொங் அணி முன்னிலை பெற்றுக்கொண்டது. கவீனா ராஜபக்ஷ இதன் போது இலங்கை அணி சார்பாக 11 புள்ளிகளைப் பதிவு செய்தார். அதேநேரம் ஹொங்கொங் அணி சார்பாக யாங் சி மற்றும் ஏ. தியுப்பர் ஆகியோர் முறையே 10 மற்றும் 2 புள்ளிகளைப் பதிவு செய்தனர்.

இரண்டாம் கால் பகுதியில், 20-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹொங்கொங் அணி முன்னிலை பெற்ற போதிலும், ஆட்டத்தின் முதல் பாதி இடைவேளையின் போது இலங்கை அணி 26 புள்ளிகளைப் பெற்று போட்டியை சமநிலைப்படுத்தியிருந்தது.

இடைவேளைக்கு பின்னர், இலங்கை அணி ஒன்றுக்கொன்று புள்ளிகளைப் பெற்று போட்டியை சமநிலையில் வைத்துகொள்ள முயற்சி செய்த போதிலும், மூன்றாம் கால் பகுதி நிறைவின் போது, ஹொங்கொங் அணி 43-38 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது.   

நான்காவதும் இறுதியுமான தீர்மானம் மிக்க கால் பகுதி நேரத்தில், இலங்கை அணி செய்த தவறுகளினால், வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹொங்கொங் அணி 12 புள்ளிகளை மேலதிகமாகப் பெற்று முன்னிலை அடைந்தது. இறுதி வரை போராடிய இலங்கை அணிக்கு ஹொங்கொங் அணியை முன்னிலை அடைய முடியவில்லை. அந்த வகையில் ஆட்ட நிறைவின் போது, 58-49 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹொங்கொங் அணி வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் ஹொங்கொங் அணி இம்முறையே மூன்றாம் இடத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது கால் பகுதி நேரம் போன்றே, நான்காவது கால் பகுதி நேரத்திலும் இலங்கை அணிக்கு 12 வாய்ப்புகள் கிடைக்கபெற்றிருந்தன. அதில், கவீனா ராஜபக்ஷ 11 வாய்ப்புகளை சாதகமாக்கினார். அதேவேளை ஹொங்கொங் அணிக்கு 20 வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அவற்றில் 15 புள்ளிகள் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டது.

இலங்கை அணி சார்பாக கவீனா ராஜபக்ஷ அரையிறுதிப் போட்டியில் 24/33 என்ற வகையில் பந்தை வீசி புள்ளிகள் பெற்றிருந்தாலும், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சிறப்பாக விளையாடி 48/52 என்ற அடிப்படையில் புள்ளிகளைப் பெற்று பங்களிப்பு செய்திருந்தார்.

அத்துடன், சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியிருந்த கவீனாவுக்கு மோசமான நடுக்கள வீராங்கனைகளின் பந்து நகர்த்தல்களும் தடையாக அமைந்திருந்தன. ஏனெனில் 79 வாய்ப்புகளை பெற்றிருந்த ஹொங்கொங் அணி 73.41% சாதகமான பெறுபேறுகளை பெற்றிருந்தது. அதேவேளை இலங்கை அணிக்கு 55 வாய்ப்புகள் கிடைத்த நிலையில் 89% சாதகமான பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது.

FA கிண்ண மோதல்களின் இறுதிக் கட்டமான அரையிறுதிகள் நாளை

இறுதிப் போட்டி – சிங்கப்பூர் எதிர் மலேசியா

குழு மட்ட போட்டிகளில் மலேசிய அணியிடம் தோல்வியுற்றிருந்த சிங்கப்பூர் அணி, இறுதிப் போட்டியில் 47-43 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று 10ஆவது ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி மலேசிய அணிக்கு பதிலடி கொடுத்தது.

குழு மட்ட போட்டிகளில் 53-50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணி மலேசிய அணியிடம் தோல்வியுற்றிருந்தது. எனினும், விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், முதல் கால்பகுதி நேரத்தில் 11-10 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், முதல பாதி முடிவின் போது 19-22 புள்ளிகள் அடிப்படையில் மலேசிய அணி முன்னிலையில் காணப்பட்ட போதும், மூன்றாம் மற்றும் நான்காம் கால்பகுதிகளில் மீண்டெழுந்த சிங்கப்பூர் அணி, முறையே 15-12 மற்றும் 13-9 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.