உலக கிண்ணத்தை கைப்பற்ற காரணமாக இருந்தவரில் ஒருவரும் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரருமான அசங்க குருசிங்கவை இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அணிக்கு முகாமையாளராக நியமித்துள்ளது.
துணிச்சலான மற்றும் தனித்து நின்று போராடக்கூடிய குணத்தை கொண்ட குருசிங்கவை பற்றிய அறிமுகம் இலங்கைக்கு தேவை இல்லை. அத்துடன் 1996ஆம் ஆண்டு உலக கிண்ண இறுதிப் போட்டியில், பிரபல துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வாவுடன் இணைந்து பெற்றுக்கொண்ட அரைச் சதம் இலங்கை அணிக்கு உலக கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.
குருசிங்க தொழில் ரீதியாக சந்தைப்படுத்துனராவார். கிரிக்கெட் உலக கிண்ணத்தை வெற்றியீட்டுவதற்கு அவர் செய்த பங்களிப்புக்காக, இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் சிறீ லங்காபிமான்ய, தேசமான்ய என்பவற்றுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது உயர்ந்த மதிப்புடைய தேசபந்து எனப்படும், தேசிய கௌரவப்பட்டம் 1996ஆம் ஆண்டில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறிய அவர், சில காலம் அங்கே இருந்தார். அத்துடன் குருசிங்க மூன்றாம் தர சான்றளிக்கப்பட்ட கிரிக்கெட் பயிற்சியாளர் என்பதுடன், சமீப காலம் வரை பிராந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக அவுஸ்திரேலியாவில் கடமையாற்றியிருந்தார்.
குருசிங்கவின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் கௌரவ திலங்க சுமதிபால, ”நாங்கள் எங்களுடைய அணியின் மூலவளத்தை நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு மேம்படுத்தும் அதேநேரம் தேசிய குறிக்கோள்களை அடைவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். அத்துடன்,எங்களுடைய தொலைநோக்கான ஒரே அணி ஒரே தேசம் என்ற தொனிப்பொருளுக்கு அமைய குருசிங்க இணைந்து கொள்வது வரவேற்கத்தக்க விடயம்” என்று குறிப்பிட்டார்.
அதேநேரம், எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான போட்டிக்கு முன்தாக தன்னுடைய பொறுப்புகளை அசங்க குருசிங்க ஏற்றுக்கொள்ளவுள்ளார்.




















