இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட்அணிக்கும் இடையிலான 3 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியது.
ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் இன்றைய போட்டியை எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் இலங்கை மகளிர் அணி விளையாடிது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை மகளிர் அணி களமிறங்கியது. முன்னைய இரண்டு போட்டிகளிலும்ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகள் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். எனவே அதற்கு எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போட்டியில் சிறந்த ஆரம்பத்தை இருவரும்பெற்றுக்கொடுத்தனர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ப்ரஸாதனி வீரக்கொடி மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை வலுப்படுத்தினர். வீரக்கொடி 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க,ஹன்சிகா 23 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இலங்கை அணி 71 ஓட்டங்களைபெற்றிருந்த நிலையில் முதலாவது போட்டியில் சிறப்பாக துடுப்பாடிய சாமரி குமாரிகாமி 4 ஓட்டங்களுடன்ஆட்டமிழந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகள் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், அதை தக்கவைத்துகொள்ளாது 102 ஓட்டங்களுக்கு இலங்கை அணி சுருண்டமையினால், மீண்டும் ஒரு முறை அவர்கள் தமது மோசமான துடுப்பாட்டத்தை காண்பித்தனர். அவுஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஜொனசன் 3விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
103 ஓட்டங்கள் எனும் இலகுவான இலக்கை நோக்கி துடுப்பாட களமிறங்கிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, மீண்டும்ஒரு முறை சிறந்த ஆரம்பத்தினை பெற்றுக்கொண்டது. இத்தொடரின் முதலாவது போட்டியிலும் இலங்கை அணிகுறைந்த ஓட்டங்களை பெற்ற போதிலும், சிறப்பாக பந்து வீசி அவுஸ்திரேலியாவுக்கு சவால் கொடுத்தது. எனவே, இப்போட்டியிலும் இலங்கை அணி சிறப்பாக பந்து வீசி சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இலங்கை அணி இம்முறை பந்து வீச்சில் திறமையை வெளிக்காட்டவில்லை.
அவுஸ்திரேலிய மகளிர் அணி சார்பாக களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான போல்டன் மற்றும்வில்லானி முதலாவது விக்கெட்டுக்காக 89 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். போல்டன் 35 ஓட்டங்களைபெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை இனோகா ரணவீர கைப்பற்றினார்.
இலங்கை மகளிர் அணியால் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. சிறப்பாக துடுப்பாடிய வில்லானி 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.
அவுஸ்திரேலிய மகளிர் அணி 27.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 104 ஓட்டங்கள் குவித்து வெற்றிபெற்றது. இலங்கை அணி இத்தொடரில் சந்தித்த மூன்றாவது தொடர் தோல்வி இதுவாகும். இலங்கை அணியின்மோசமான துடுப்பாட்டமே மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியுற முக்கிய காரணியாக அமைந்தது.
ஒரு நாள் தொடரில் ஒரு போட்டி மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய அணி 3-0 என தொடரைவென்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை மகளிர் அணி 102/10 (36.5) – ப்ரஸாதனி வீரக்கொடி 31, ஹன்சிகா 23, ஐயங்கேணி 15, ஜோனசென் 3/1
அவுஸ்திரேலிய மகளிர் அணி 104/1 (27.3) – வில்லானி 48*, போல்டன் 35, லென்னிங் 8*, இனோகா ரணவீர 1/27






















