உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி

1594

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரேயொரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இடம்பெற்றுள்ளதாக ‘போர்ப்ஸ்’ (Forbes) பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், உலகின் அதிக சம்பளம் பெறும் வீரராக உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ப்ளோய்ட் மேவெதர் (Floyd Mayweather) முதலிடத்தையும், கால்பந்து உலகின் நட்சத்திர ஜாம்பவான்களான லியோனல் மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து ஐ.சி.சியுடன் இன்று விசேட பேச்சுவார்த்தை

2018 ஆம் ஆண்டில் உலகில் அதிகளவு சம்பளம் பெறும் 100 விளையாட்டு வீரர்கள் குறித்து ஆய்வு நடத்தி அந்தப் பட்டியலை ‘போர்ப்ஸ்’ நிறுவனம் நேற்று (05) வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களைப் போன்று இந்த வருடமும் அமெரிக்க வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளதை காணமுடிகின்றது.

11 விளையாட்டுக்களை உள்ளடக்கியதாக 22 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த 66 வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்களும், டொமினிகன் குடியரசு மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று தடகள வீரர்களும் இடம்பெற்றுள்ளனர், அத்துடன், ஆர்ஜென்டீனா, பிரேசில், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

இதுதவிர, முதல் 100 இடங்களில் என்பிஏ (NBA) எனப்படும் கூடைப்பந்தாட்ட வீரர்கள் 40 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த வருடம் 32 ஆக இருந்த சாதனை இவ்வருடம் முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் ரக்பி எனப்படும் என்எப்எல் (NFL) போட்டியில் விளையாடும் 18 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஓட்டுமொத்தத்தில், பேஸ்போல் (Baseball) விளையாட்டைச் சேர்ந்த 14 வீரர்களும், கால்பந்து வீரர்கள் 9 பேரும், கோல்ப் (Golf) விளையாட்டு வீரர்கள் 5 பேரும், குத்துச்சண்டை, டென்னிஸ் வீரர்கள் தலா 4 பேரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி, முதலிடத்தில் 41 வயதான அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேவெதர் உள்ளார். இவர் வருடமொன்றுக்கு 28.5 கோடி டொலர் வருமானம் ஈட்டுகிறார். கடந்த 7 வருடங்களில் 4 ஆவது முறையாக அவர் முதலிடத்தினை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ரஷீத் கானின் மாய சுழலோடு பங்களாதேஷ் உடனான T20 தொடர் ஆப்கான் வசம்

கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்சி 2 ஆவது இடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 ஆவது இடத்திலும் உள்ளனர். மெஸ்சியின் வருவானம் 11.1 கோடி டொலர்களுக்கும் அதிகமாகும். ரொனால்டோ 10.8 கோடி டொலர்கள் சம்பளம் பெறுகிறார்.

இந்நிலையில், பிரேசில் வீரர் நெய்மர் ஆண்டுக்கு 9 கோடி டொலர்கள் வருமானம் ஈட்டி, 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 7 ஆவது இடத்திலும், கூடைப்பந்தாட்ட வீரர் லிப்ரான் ஜேம்ஸ் 6 ஆவது இடத்திலும், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 20 ஆவது இடத்திலும் உள்ளனர். கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் 16 ஆவது இடத்திலும், ரோரி மெக்ராய் 26 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதில் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரர் லிப்ரோன் ஜேம்ஸ் 8.55 கோடி டொலர் சம்பளம் பெற்று 6 ஆவது இடத்திலும், அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரர் மெட் ரயன் (6.75 கோடி டொலர்) மற்றும் மெத்திவ் ஸ்டபெர்ட் (5.95 கோடி டொலர்) ஆகியோர் பெற்று முறையே 9 ஆவது, 10 ஆவது இடங்களில் உள்ளனர்.

அதுமாத்திரமின்றி கடந்த 18 வருடங்களாக உலகின் அதிக சம்பளம் பெறும் வீரர்கள் பட்டியலில் முன்னிலை பெற்ற அதி சிறந்த வீரர்களாக ப்ளோய்ட் மேவெதர், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் டைகர் வூட்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வருடமொன்றுக்கு 2.40 கோடி டொலர் வருமானம் (இந்திய ரூபாவில் 160 கோடி) ஈட்டி குறித்த பட்டியலில் 83 ஆவது இடத்தில் உள்ளார். கடந்த 3 வருடங்களாக போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுவருகின்ற கோஹ்லி, கடந்த வருடம் 89 ஆவது இடத்தையும் பெற்றிருந்தார்.

பூமா, பெப்சி, ஆவ்டி (audi), ஆக்லே, கோல்கேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும், விளம்பரத்திலும் நடித்து வருகின்ற விராட் கோஹ்லி, இந்திய கிரிக்கெட் சபையினால் வருடமொன்றுக்கு ரூ6.70 கோடி சம்பளத்தையும் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2014 இல் வெளியிடப்பட்ட போர்ப்ஸ் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனி, 3 கோடி டொலர் சம்பளத்துடன் 22 ஆவது இடத்தினைப் பெற்றிருந்தார்.

2018 பிஃபா உலகக் கிண்ண வாய்ப்பை இழந்த பிரபலங்கள்

எனினும், 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் ஒரு வீராங்கனைகள் கூட இடம் பெறவில்லை. இதற்குமுன் பட்டியலில் இடம்பெற்றிருந்த டென்னிஸ் நட்சத்திரங்களான சீனாவின் லீ நா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோரும் இந்த வருட பட்டியலில் இடம்பெறவில்லை.

லீ நா டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாதங்களுக்குப் பின் ஷரபோவா தற்போதுதான் விளையாட வந்துள்ளார், மேலும், குழந்தை பெற்று செரீனாவும் தற்போது விளையாடி வருகிறார் என்பதால், இவர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால், இவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.