தென்னாபிரிக்க தொடருக்கான 30 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

South Africa tour of Sri Lanka 2021

1413
30-man squad for limited over series

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளுக்கான 30 பேர்கொண்ட முதற்கட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் முக்கிய மாற்றமாக, அனுபவ விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக மார்ச் மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் தொடரில் சந்திமால் விளையாடியிருந்த நிலையில், தற்போது டயலொக் SLC அழைப்பு T20 லீக் தொடரில் சிறப்பாக பிரகாசித்துவருவதன் காரணமாக மீண்டும் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

>> அவிஷ்க, சந்திமாலின் அபாரத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரெட்ஸ்

இவருடன், டயலொக் SLC அழைப்பு T20 லீக் தொடரில் சிறப்பாக பிரகாசித்துவந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடியவர். இவர், இலங்கை அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி, சற்று சிறந்த பெறுபேற்றையும் பெற்றுள்ளார். தற்போது டயலொக் SLC அழைப்பு T20 லீக் தொடரில் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று அரைச்சதங்களை பதிவுசெய்து மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

லஹிரு மதுஷங்க வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடிய சகலதுறை வீரர் என்பதை டயலொக் SLC அழைப்பு T20 தொடரில் நிரூபித்துள்ளார். புளூஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 39 பந்துகளில் 74 ஓட்டங்களை விளாசியிருந்தார்.  இவர், 2017ம் ஆண்டு இலங்கை அணிக்காக அறிமுகமாகியிருந்த போதும், கடைசியாக 2019ம் ஆண்டு இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார். தற்போது, இவர் சிறிய உபாதைக்கு முகங்கொடுத்திருந்தாலும், குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், புதுமுக வீரர்களாக மஹீஷ் தீக்ஷன, புலின தரங்க, சஹன் ஆரச்சிகே மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர், டயலொக் SLC அழைப்பு T20 லீக் தொடரில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியதன் ஊடாக, தேசிய அணி வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்கள், கடந்த வருடம் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்கிலும் சிறப்பாக பிரசாகித்திருந்தனர்.

அத்துடன், கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருக்கும் குசல் பெரேரா, குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், தொடரில் விளையாடுவதற்கு இவர் தயாராகிவிடுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், அனுபவ வீரர்களான திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் குழாத்தில் இணைக்கப்படவில்லை. 

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 30 பேர்கொண்ட குழாத்திலிருந்து, தென்னாபிரிக்க தொடருக்காக 20-22 வீரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த 30 வீரர்களும் T20 உலகக் கிண்ணத்துக்கான உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் பயிற்சிகளில் ஈடுபடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், மினோத் பானுக, தினேஷ் சந்திமால், அஷேன் பண்டார, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, சஹன் ஆரச்சிகே, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ. நுவான் பிரதீப், டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, புலின தரங்க, ரமேஷ் மெண்டிஸ், லக்ஷான் சந்தகன், அசித பெர்னாண்டோ, இஷான் ஜயரத்ன, தனன்ஜய லக்ஷான், ஷிரான் பெர்னாண்டோ, லஹிரு மதுஷங்க (உடற்தகுதி கவனத்தில் கொள்ளப்படும்)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<