ஆசிய றக்பி கிண்ணத்தில் இலங்கைக்கு 2ஆம் இடம்

201
Asia Rugby Championship

அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய றக்பி கிண்ணத்தில் முதலாம் பாகத்தில் 2ஆம் இடத்தை இலங்கை றக்பி அணி வென்றது. ஹொங்கொங் அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கடுமையான போட்டிக்குப் பின்னர் இறுதி நிமிடத்தில் தோல்வியுற்று இலங்கை அணி 2ஆம் இடத்தை தக்கவைத்தது.

அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய றக்பி கிண்ணத்திற்கான போட்டிகள் ஹொங்கொங் நாட்டில் செப்டம்பர் 2ஆம் திகதி ஆரம்பமானது. நடைபெற்று முடிந்த இலங்கை சூப்பர் 7s போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களைக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட இலங்கை அணி முற்றிலும் இளைய வீரர்களை உள்ளடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்ட ஜப்பான் அணி அரை இறுதி சுற்றுக்கு தெரிவாகாமல் வெளியேறியது அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியது. தென் கொரியா மற்றும் சீன அணிகளிடம் தோல்வியுற்ற ஜப்பான் அணி ஆசிய கிண்ணப் போட்டிகளில் அரை இறுதி சுற்றுக்கு தெரிவாகாதது இதுவே முதல் தடவையாகும்.

1ஆம் நாள்

இலங்கை மற்றும் சைனீஸ் தாய்பேய் அணிகளுக்கிடையிலான போட்டி

இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்பேய் அணியை எதிர் கொண்டது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி ஜேசன் திஸ்ஸநாயக மூலமாக முதலாவது ட்ரை வைத்தது. ஜேசன் இரண்டாவது ட்ரையும் வைக்க இளம் வீரர் தரிந்த ரத்வத்த மூன்றாவது ட்ரை வைத்து இலங்கை அணியை முன்னிலை அடையச் செய்தார்.

சிறப்பாக விளையாடிய கெவின் டிக்சன் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய சைனீஸ் தாய்பேய் அணி முதலாவது ட்ரையை பெற்றுக்கொண்டது. மேலும் இன்னொரு ட்ரை வைத்த சைனீஸ் தாய்பேய் அணி 12 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. எனினும் சிறப்பாக விளையாடிய இலங்கை மொத்தமாக 7 ட்ரை வைத்து போட்டியை 43-12 என இலகுவாக வென்றது.


இலங்கை மற்றும் மலேசியா அணிகளுக்கிடையிலான போட்டி

இலங்கை தனது இரண்டாவது போட்டியில் மலேசியா அணியை சந்தித்தது. முதலாவது போட்டியை இலகுவாக வென்ற இலங்கை அணிக்கு மலேசிய அணி சற்று சவாலாக அமைந்தது.

போட்டியை ஆரம்பித்த உதையைப் பயன்படுத்தி ஆரம்பித்த சில செக்கனிலேயே முதல் ட்ரை வைத்தார் இலங்கை 20 வயதிற்குட்பட்ட றக்பி அணி மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரியின் முன்னால் தலைவர் தரிந்த ரத்வத்த. மற்றுமொரு இளம் வீரரான கெவின் டிக்சன் இலங்கை அணி சார்பாக 2ஆவது ட்ரையை வைத்து இலங்கை அணியை 14-0 என முன்னிலை அடையச் செய்தார்.

எனினும் போட்டியை விட்டுக்கொடுக்காத மலேசிய அணி தொடர்ந்து இரண்டு ட்ரை வைத்து இலங்கை அணிக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்தது. மலேசிய அணியின் சிறப்பான பதில் அடிக்கு பின்னர் முதல் பாதி 14-14 என சமநிலையில் முடிந்தது.

இரண்டாம் பாதியில் முன்னையதை விட பலமாக களமிறங்கிய இலங்கை அணி மலேசிய அணிக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்காது தொடர்ந்து 4 ட்ரைகளை வைத்து 40 புள்ளிகளைப் பெற்றது. இரண்டாம் பாதியில் இலங்கை பின் வரிசை வீரர்களின் சிறிய தவறால் மலேசிய அணி ஒரு ஆறுதல் ட்ரை பெற்றுக்கொண்டது. இறுதியில் இலங்கை அணி 40-21 என்று வெற்றிபெற்றது.


இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கிடையிலான போட்டி

முதல் இரண்டு போட்டிகளையும் இலகுவாக வென்ற இலங்கை அணிக்கு ஹொங்கொங் அணி பெரும் தடையாக அமைந்தது. சிறப்பாக விளையாடி வந்த இலங்கை அணியானது ஹொங் கொங் அணியிடம் தமது திறமைகளை வெளிக்காட்ட தவறியது கவலைக்குரிய விடயமாகும்.

ஆரம்பம் முதல் சற்றுத் தடுமாறிய இலங்கை அணிக்கு எதிராக ஹொங்கொங் அணியானது தொடர்ந்து இரண்டு ட்ரை வைத்து 10-0 என முன்னிலை கொண்டது. இலங்கை அணி சார்பாக கெவின் டிக்சன் மிகச் சிறப்பாக விளையாடினார். எனினும் ஹொங்கொங் அணியின் வீரர்களின் சிறப்பான தடுப்பினால் ட்ரை வைக்க முடியவில்லை. இலங்கை அணிக்கு எதிரணியின் 22 மீட்டரினுள் இரண்டு தடவைகள் பெனால்டி வாய்ப்பு கிடைத்தாலும், தலைவர் தனுஷ்க ரஞ்சன் எல்லைக் கோட்டைத் தொட தவறினார். முதலாம் பாதி ஹொங்கொங் வசம் முடிந்தது.

இரண்டாவது பாதியிலும் திறமையைக் காட்ட இலங்கை அணி தவற ஹொங்கொங் அணி சிறப்பாக விளையாடி மேலும் 2 ட்ரை வைத்து இலங்கை அணியை பின்தள்ளியது. இலங்கை அணிக்கு 2ஆம் பாதியிலும் பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் இலங்கை அணி புள்ளிகளைப் பெறத்தவறியது. இறுதியில் 22-00 என்று இலங்கை அணி தோல்வியுற்று குழு A இல் 2ஆம் இடத்தை பிடித்தது.

2ஆம் நாள்

ஹொங்கொங் அணியிடம் தோல்வியுற்றதன் மூலம் 2ஆம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி அரையிறுதிப் போட்டியில் சீன அணியுடன் மோதியது. சீன அணி முதலாம் நாளில் பலம் வாய்ந்த அணியாகக் காணப்பட்டது. ஜப்பான் அணியை 12-10 என்ற புள்ளி அடிப்படையில் சீன அணி வென்றது. எனினும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு பலம்மிக்க நியூசிலாந்து  அணியை தோற்கடித்த ஜப்பான் குழாமில் இருந்த எந்த வீரரும் ஜப்பான் அணி சார்பாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் அணிகளை வென்ற சீன அணி குழு B இல் 1ஆம் இடத்தைப் பிடித்தது.

பலமிக்க சீன அணியுடன் மோதிய இலங்கை அணி ஆரம்பத்தில் இரண்டு ட்ரை வைத்து தனது திறமையை வெளிக்காட்டியது. எனினும் சிறப்பாக விளையாடிய சீன அணி முதலாம் நாளில் திறமையாக விளையாடியது போன்று சிறப்பாக விளையாடி ட்ரை வைத்து முன்னிலை அடைந்தது.

போட்டியின் நேரம் முடிவுற்று இருந்த நிலையில் 14-17 என்று இலங்கை அணி பின்னிலை அடைந்து இருந்தது. எனினும் 14 ஆவது நிமிடத்தில் சிறப்பாக பாஸ் செய்து இலங்கை அணி ட்ரை வைத்து வைத்ததன் மூலம் சீன அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.


இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கிடையிலான போட்டி (இறுதிப் போட்டி)

குழு A இல் ஹொங்கொங் அணியுடன் இலங்கை அணி 22-00 என்று தோல்வியுற்றதன் பின்னர் இலங்கை அணி அதே அணியை இறுதி போட்டியில் மீண்டும் எதிர்கொண்டது. முதல் போட்டியில் ஹொங்கொங் அணி இலகுவாக வெற்றிபெற்றது போன்று இப்போட்டியிலும் வெற்றிபெறும் என எதிர்பார்த்த போதும் இலங்கை அணி கடும் சவாலாக அமைந்தது.

போட்டி ஆரம்பித்த சில தருணங்களில் இலங்கை அணி சார்பாக தலைவர் தனுஷ்க ரஞ்சன் முதலாவது ட்ரை வைத்து இலங்கை அணிக்கு முன்னிலையைக் கொடுத்தார். எனினும் பதற்றம் அடையாத ஹொங்கொங் அணி தொடர்ந்து இரண்டு ட்ரை வைத்து முதல் பாதியை 12-07 என வசமாக்கிக்கொண்டது.

இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி பாஸ் செய்து ஜேசன் மூலமாக ட்ரை வைத்தது. சிறிது நேரத்தில் தனது வேகத்தின் மூலமாக இலங்கை அணிக்காக 3ஆவது ட்ரை வைத்தார் தலைவர் ரஞ்சன். அப்போது இலங்கை அணி 17-12 என முன்னிலை பெற்று காணப்பட்டது.

எனினும் பதற்றமடையாத ஹொங்கொங் அணி, தமது அணியில் சில மாற்றங்களை செய்ததன் மூலம் இன்னொரு ட்ரை வைத்து 19-17 என முன்னிலை கொண்டது. போட்டியின் இறுதி நிமிடத்தில் தமக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் மேலும் 3 புள்ளிகளைக் குவித்த ஹொங்கொங் அணியானது 22-17 என்று வென்று 1ஆம் இடத்தைப் பிடித்தது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்