தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான திகதி அறிவிப்பு

164

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 2007ஆம் ஆண்டு கொழும்பு சுகதாஸ மைதானத்தில் நடைபெற்றது. அதனையடுத்து இறுதியாக 2013ஆம் ஆண்டு இந்தியாவின் ரஞ்சியிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்ட போதிலும் நிதிப்பற்றாக்குறை, போதிய மைதான வசதிகள் காணப்படாமை உள்ளிட்ட காரணங்களால் அந்த தொடரை நடத்த முடியாமல் போனது.

எனினும், கடந்த வருடம் குறித்த போட்டித் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளின் எல்லைப்பகுதியில் நிலவிவருகின்ற அரசியல் முரண்பாடுகள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக அத்தொடரை நடத்துவதிலிருந்து இந்தியா விலகிக் கொண்டது.

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு

பெரும்பாலான சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்கள் இடம்பெறவுள்ள…

இந்நிலையில், சுமார் 4 வருடங்களாக நடைபெறாமல் இழுபறி நிலையில் இருந்த தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”நீண்ட இடைவெளியின் பிறகு தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளது. எனவே தேவையற்ற முறையில் விழாக்களை நடத்தி பணத்தை வீணடிக்காது, போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கான  தொழில்நுட்ப  யுக்திகளை கையாள்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். எனவே இம்முறை போட்டித் தொடரில் ஆரம்ப மற்றும் இறுதி நாள் நிகழ்வுகள் உள்ளிட்ட களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறாது.

அதேநேரம், தெற்காசியாவைச் சேர்ந்த 6 நாடுகள் தமது பங்குபற்றலை இதுவரை உறுதி செய்துள்ளன. இதன்படி, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வீரர்கள் இம்முறை போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்” என தெரிவித்தார்.

இதன்படி, சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் இடம்பெறவுள்ள முதலாவது சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடராக இது அமையவுள்ளது. முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிய கிரான்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் 3ஆவது கட்டம் இலங்கையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26, 27, 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

16, 18, 20 மற்றும் 23 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர்களுக்கான இலங்கை குழாமுக்காக தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இளையோர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

56ஆவது இளையோர் (கனிஷ்ட) மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள்…

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜுலை மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் மற்றும் ஆர்ஜென்டீனாவில் எதிர்வரும் ஒக்டோபரில் மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள கோடைகால இளையோர் (18 வயதுக்குட்பட்ட) ஒலிம்பிக் போட்டிகளுக்கான வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டியாகவும் இப்போட்டித் தொடர் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த போட்டித் தொடர்களை முன்னிட்டு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் 27 பேர் கொண்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.

இதில் 17 வீரர்களும், 10 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ள அதேநேரம், மைதான நிகழ்ச்சிகளுக்காக 3 வீரர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இக்குழாமில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2ஆவது தடவையாகவும் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர் கே. நெப்தலி ஜொய்சன் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் குறித்த உடனடித் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் போட்டி முடிவுகளை நேரலையாக, உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு Thepapare.com உடன் இணைந்திருங்கள்.