முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி

190
Image - ESPNcricinfo

கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய மெக்ஸ் ஓடௌட்டின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நெதர்லாந்து அணி டக்வத் லூவிஸ் முறையில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இரு தரப்பு தொடரில் விளையாடுவதற்காக நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அங்கு நெதர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களிலும் விளையாடவுள்ளது.

இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து வைத்துள்ளோம் – ருமேஷ் ரத்னாயக்க

இலங்கை கிரிக்கெட் அணி, தம்முடைய ஆறாவது உலகக்……..

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டி இன்று (19) டெவென்டரில் அமைந்துள்ள ஸ்போர்ட்பார்க் ஹெட் ஸ்கொட்ஸ்வெல்ட் மைதானத்தில் நடைபெற்றது. இம்மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் சர்வதேச போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டியானது மூன்று ஓவர்கள் குறைக்கப்பட்டு அணிக்கு 47 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

நெதர்லாந்து அணி சார்பாக தொபைஸ் வைஸீ மற்றும் மெக்ஸ் ஓடௌட் ஆகிய இரண்டு வீரர்களும், ஜிம்பாப்வே அணி சார்பாக ஐன்ஸ்லி என்ட்லோவு எனும் வீரரும் கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடினர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அணிக்கு ஏமாற்றமளித்தனர். சொலொமொன் மிர் 4 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஹமில்டன் மஸகட்ஸா 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்துவந்த கிரேக் ஏர்வின் 16 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார்.

பிரென்டன் டைலருடன் ஜோடி சேர்ந்த சோன் வில்லியம்ஸ் ஆகியோர் இணைப்பாட்டமாக 48 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். சோன் வில்லியம்ஸ் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் ஆடுகளம் நுழைந்த சிக்கன்டர் ராஸா 11 ஓட்டங்களுடனும், அதனை தொடர்ந்துவந்த பீட்டர் மூர் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதிவரை அணிக்காக போராடிய விக்கெட் காப்பாளர் பிரென்டன் டைலர் நிதானமான முறையில் துடுப்பெடுத்தாடி 85 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்று 40ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆடுகளம் நுழைந்த டொனால்ட் திரிபானோ 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து அணி 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கெய்ல் ஜர்விஸ் 32 ஓட்டங்களுடனும், டென்டி சதாரா ஓட்டமெதுவும் பெறாமலும் ஆடுகளத்தில் இருந்தனர்.

இலங்கை கிரிக்கெட்டின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படைத் தளபதி நியமனம்

முன்னாள் விமானப்படை தளபதி ஏயார் சீப் மார்ஷல்………

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் ப்ரெட் கிலாஸன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், போல் வென் மீகிரன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பீட்டர் சீலர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், விவியன் கிங்மா மற்றும் ரோலொப் வேன் டர் மேவர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

206 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நெதர்லாந்து அணி 42 ஓட்டங்களை பெற்ற வேளையில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் கன்னி போட்டியில் விளையாடிய மெக்ஸ் ஓடௌட் – பென் கூப்பர் ஜோடி 68 ஓட்டங்களை பகிர்ந்து அணிக்கு வலுச்சேர்த்தது. பென் கூப்பர் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் ஆடுகளம் நுழைந்த பஸ் டீ லீட் 2 ஓட்டங்களுடன் திரும்பினார்.

நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மெக்ஸ் ஓடௌட் – வெஸ்லி பாரீஸி முறியடிக்கப்படாத இணைப்பாட்டமாக 92 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள நெதர்லாந்து அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து டக்வத் லுவிஸ் முறையில் 26 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றது.

ஆடுகளத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மெக்ஸ் ஓடௌட் 82 ஓட்டங்களுடனும், வெஸ்லி பாரீஸி 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காணப்பட்டனர். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் சோன் வில்லியம்ஸ் 38 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும், ஐன்ஸ்லி என்ட்லோவு 29 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கன்னி போட்டியில் 82 ஓட்டங்களை குவித்த மெக்ஸ் ஓடௌட் தெரிவானார். இவ்வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் நெதர்லாந்து அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி நாளை மறுதினம் (21) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<