ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த இலங்கை மகளிர் அணி

313

இலங்கை மகளிர் அணிக்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று (21) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப்பிற்கான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதன்படி, களமிறங்கிய இலங்கை மகளிர் அணி ஏமாற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. போட்டியின் 50 ஓவர்கள் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடிய போதும், சகல விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

அணியின் தலைவி சமரி அட்டபத்து உட்பட முன்வரிசை வீராங்கனைகள் குறைந்த ஓட்டங்களுக்கு வெளியேறினர். எனினும், மத்தியவரிசையில் போராடிய ஹர்சித மாதவி 42 ஓட்டங்களையும், ஹன்சிமா கருணாரத்ன 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டு 53 ஓட்டங்களை 6 ஆவது விக்கெட்டுக்காக பகிர்ந்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய ஓஷதி ரணசிங்க 29 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க இலங்கை அணியின் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. போட்டியின் மத்திய பகுதியில் விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் மந்தமான ஓட்ட வேகத்தின் காரணமாக இலங்கை அணி சவாலான இலக்கினை நிர்ணயிக்க தவறியது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு சார்பில் அன்யா ஷ்ரப்சோல், கெட் க்ரொஸ் மற்றும் அலெக்ஸ் ஹாட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Photos: Sri Lanka Women vs England Women | 3rd ODI

இதனைத் தொடர்ந்து இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி, எமி ஜோன்ஸ் மற்றும் டமி பியூமொண்ட் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 26.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளாக களமிறங்கிய எமி ஜோன்ஸ் மற்றும் டமி பியூமொண்ட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 127 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க, அடுத்துவந்த லுவுரென் வின்பீல்ட் தனது பங்கிற்கு ஓட்டங்களை குவித்து போட்டியை நிறைவு செய்தார்.  அதிகபட்சமாக எமி ஜோன்ஸ் 76 ஓட்டங்களையும், டமி பியூமொண்ட் 63 ஓட்டங்களையும் பெற்றதுடன், லுவுரென் வின்பீல்ட் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் சஷிகலா சிறிவர்தன 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து மகளிர் அணி, ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப்பிற்கான 15 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் (18 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், இலங்கை அணி 15 போட்டிகளில் ஒரு வெற்றியை மாத்திரம் பெற்று புள்ளிப்பட்டியலில் (2 புள்ளிகள்) இறுதி இடத்தை பிடித்துள்ளது.

இலங்கை மங்கைகளை வீழ்த்திய இங்கிலாந்து மகளிர்

இதேவேளை, இலங்கை மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20I  தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஸ்கோர் விபரம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க