இலங்கை அணியுடனான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 88 ஓட்டங்களால் இலகு வெற்றியை பதிவு செய்த அதேவேளை, 5-0 அடிப்படையில் போட்டித்தொடரை கைப்பற்றியதனுடாக ஐசிசி (ICC) ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இன்றைய ஆட்டத்தை வெற்றிகொள்ளும் நோக்கில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. நுவன் குலசேகர மற்றும் லக்க்ஷான் சந்தகனுக்கு பதிலாக சுரங்க லக்மால், ஜெப்ரி வண்டர்சே ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். தென்னாபிரிக்க அணியில் டுவைன் ப்ரிடோரியஸ், தப்ரைஸ் ஷம்சி ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் மொரிஸ் மற்றும் அடில் பளுகேயோ (AL Phehlukwayo) உள்வாங்கப்பட்டிருந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தது. அந்த வகையில் களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குவிண்டன் டி கொக் 87 பந்துகளை எதிர்கொண்டு 109 ஓட்டங்களை விளாசினார். அதேநேரம் முதல் விக்கட்டுக்காக 187 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட ஹஷிம் அம்லா 134 பந்துகளுக்கு 5 சிக்ஸ்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 154 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொண்டார்.

Photos: Sri Lanka v South Africa | 5th ODI

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ், டு ப்லெஸ்சிஸ் மற்றும் ஜேபி டுமினி ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஏழாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய பர்ஹான் பெஹார்டின் தென்னாபிரிக்க அணி இறுதி எட்டு ஓவர்களுக்குள் 99 ஓட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு 20 பந்துகளில் 32 ஓட்டங்களை விளாசி பங்களிப்பு செய்தார்.

இறுதியில் தென்ன்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 384 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சிச்ல் இலங்கை அணி சார்பாக ஓட்டங்களை சற்றேனும் கட்டுப்படுத்திய சுரங்க லக்மால் 7.10 சாராசரியில் 71 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேநேரம் தென்னாபிரிக்க அணி இலங்கை அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட கூடிய ஓட்டங்களாக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவானதுடன், அனைத்து சர்வதேச அணிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட 9ஆவது கூடிய ஓட்டங்களாகவும் இன்றைய கிரிக்கெட் வரலாற்றில் எழுதப்பட்டது.

வெற்றி பெறுவதற்கு கடினமான 385 ஓட்டங்களை இலக்காக கொண்டு, வலிமைமிக்க தென்னாபிரிக்க அணிக்கெதிராக களமிறங்கிய இலங்கை அணி இத்தொடரில் முதல் தடவையாக 50 ஓவர்களையும் எதிர்கொண்டு அசேல குணரத்னவின் கன்னிச் சதத்துடன் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை டி20 குழாமில் பாரிய மாற்றங்கள்: அவுஸ்திரேலிய அணியுடனான டி20 தொடருக்கு தலைவராக தரங்க

ஐந்தாவது  விக்கெட்டுக்காக களமிறங்கிய அசேல குணரத்ன 2 சிக்ஸ்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 117 பந்துகளுக்கு 114 ஓட்டங்களை விளாசினார்.மேலும், அசேல குணரத்ன இறுதியாக பெற்றுகொண்ட 50 ஓட்டங்களை வெறும் 25 பந்துகளில் தென்னாபிரிக்க அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து பெற்றுகொண்டார். அதேநேரம் 9ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சுரங்க லக்மாலுடன் இணைந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல் தரங்க இந்த போட்டியில் ஜொலிக்கவில்லை. கடந்த போட்டியில் சதம் விளாசிய உபுல் தரங்க ஏழு ஓட்டங்களுக்கும், 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்சர்கள் உள்ளடங்கலாக 19 பந்துகளுக்கு 39 ஓட்டங்களை பெற்று அதிரடி காட்டிய நிரோஷன் திக்வெல்லவும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். குமார் சங்கக்காரவின் இடத்தில் துடுப்பாடிய குசல் மென்டிஸ் ஒரு ஓட்டத்துக்கு ஆட்டமிழந்தார். அத்துடன், 13.1 ஓவர்களுக்குள் 82 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இலங்கை அணியின் 5 முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்து மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பந்துவீச்சில் இலங்கை அணிக்கு அதிகம் சேதத்தை ஏற்படுத்திய கிறிஸ் மொரிஸ் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை விழ்த்தினார். போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஹஷிம் அம்லாவும் போட்டித் தொடரின் நாயகனாக டு ப்லெசிஸ்சும் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா: 384/6 (50) – குவிண்டன் டி கொக் 109, ஹஷிம் அம்லா 154, டு ப்லெஸ்சிஸ் 41, ஏபி டி வில்லியர்ஸ் 14, ஜேபி டுமினி 10, பர்ஹான் பெஹார்டின் 32, சுரங்க லக்மால் 71/3, லஹிறு மதுஷங்க 70/2

இலங்கை: 296/8 (50) – அசேல குணரத்ன 114*, நிரோஷன் திக்வெல்ல 39, சசித் பத்திரண 56, வெய்ன் பார்னெல் 51/2, கிறிஸ் மொரிஸ் 31/4