பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான்

3221

தேசிய அணியின் தெரிவாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமின் 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இக்குழாமில் இலங்கை அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மற்றும் தொடை உபாதையிலிருந்து பூரண சுகத்தை பெறாத அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை.

மேலும் இடது கை துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலகவும் தனது தோற்பட்டை உபாதையில் இருந்து இன்னும் மீளாதமையினால் இலங்கை ஒரு நாள் குழாமில் இணைக்கப்படவில்லை.

சுழல் வீரர்களான ஜெப்ரி வன்டர்சேய் மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடர் மூலம் மீண்டும் இலங்கை அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான தினேஷ் சந்திமாலும் ஒரு நாள் குழாமில் துடுப்பாட்ட வீரராக நீடிக்கின்றார். அத்தோடு முதுகு உபாதைக்கு ஆளாகிய காரணத்தினால் இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் விளையாடாத சாமர கப்புகெதர தற்போது பூரண உடற்தகுதியுடன் காணப்படுவதால் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

>>இலங்கை ஒரு நாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள லசித் மாலிங்க<<

சுரங்க லக்மால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் மீண்டும் இலங்கையின் ஒரு நாள் குழாமில் இணைவதன் மூலம் துஷ்மந்த சமீரவுடன் சேர்த்து அணியின் வேகப்பந்து வீச்சுத் துறையினை வலுப்படுத்தவுள்ளனர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி டுபாய் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை ஒரு நாள் குழாம்

உபுல் தரங்க (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், சாமர கப்புகெதர, மிலிந்த சிறிவர்தன, திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, விஷ்வ பெர்னாந்து, அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்சேய்