முதல் நாளில் பந்துவீச்சில் ஜொலித்த இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் நெருக்கடி

1350

போர்ட் எலிசபெத் நகரில் இன்று (21) ஆரம்பமான இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கின்றது.

போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி போன்று இலங்கை அணி தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை குறைவான ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி திறமை காண்பித்திருந்த போதிலும், தமது துடுப்பாட்டத்தில் சிறிய தடுமாற்றத்தை காண்பித்திருக்கின்றது.

SLCயின் புதிய ஒப்பந்தத்தில் 77 வீரர்கள்: மாலிங்கவுக்கு சிறப்பு விருது

முன்னதாக, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

இதனை அடுத்து இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் இலங்கை அணி, தென்னாபிரிக்க மண்ணில் தமது முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை எதிர்பார்த்த வண்ணம் களத்தடுப்பில் ஈடுபட தயராகியது.

இப்போட்டியில் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியில் மாற்றம் ஒன்று இடம்பெறும் எனக் கூறப்பட்டிருந்த போதிலும் அது நடைபெற்றிருக்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வீரர்களை தோற்கடித்த அதே இளம் இலங்கை வீரர்களே இப்போட்டியிலும் பங்கேற்றிருந்தனர்.

Photos: Sri Lanka vs South Africa 2nd Test 2019 | Day 1

இலங்கை அணி – திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓஷத பெர்னாந்து, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தனன்ஞய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாந்து

எனினும், தென்னாபிரிக்க அணி தமது குழாமில் மாற்றம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது. அதன்படி, காயமுற்ற வேகப்பந்து வீச்சாளர் வெர்னன் பிலாந்தரிற்கு பதிலாக சகலதுறை வீரர் வியான் முல்டர் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருந்தார்.

தென்னாபிரிக்க அணி – டீன் எல்கார், எய்டன் மார்க்ரம், ஹஷிம் அம்லா, பாப் டு ப்ளெசிஸ்(அணித்தலைவர்), டெம்பா பெவுமா, வியான் முல்டர், கேசவ் மஹராஜ், ககிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன், டூஆன்னே  ஒலிவியர்

தொடர்ந்து தென்னாபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க, டீன் எல்கார் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்திருந்தனர்.

இரண்டு வீரர்களும் தென்னாபிரிக்க அணிக்கு உறுதியான ஆரம்பம் ஒன்றை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கை அணியின் புதிய நட்சத்திரமாக மாறிவரும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாந்து அடுத்தடுத்த விக்கெட்டுக்களுடன் ஆரம்பத்திலேயே தென்னாபிரிக்க அணியை நிலைகுலையச் செய்தார்.

பெர்னாந்துவின் முதல் விக்கெட்டாக போல்ட் செய்யப்பட்டிருந்த டீன் எல்கார் 6 ஓட்டங்களுடன் ஓய்வறை நடக்க, எல்கார் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் அனுபவ வீரர் ஹஷிம் அம்லாவும் போல்ட் செய்யப்பட்டு ஓட்டமேதுமின்றி நடந்தார்.

பின்னர் அம்லா போன்று புதிய துடுப்பாட்ட வீரராக வந்த டெம்பா பெவுமா, கசுன் ராஜிதவின் அபார ரன் அவுட் ஒன்றினால் ஓட்டங்கள் எதனையும் பெற முடியாமல் ஆட்டமிழந்திருந்தார். இவ்வாறான தொடர்ச்சியான விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்க அணி ஒரு கட்டத்தில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்துடன் காணப்பட்டிருந்தது.

எனினும், களத்தில் நின்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்த தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸ் தென்னாபிரிக்க அணியின் நான்காம் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் (58) ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த இரு வீரர்களினதும் இணைப்பாட்டம் டு ப்ளெசிஸின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. இலங்கை அணித்தலைவர் கருணாரத்னவினால் போல்ட் செய்யப்பட்ட தென்னாபிரிக்க அணித்தலைவர் 25 ஓட்டங்களோடு ஆட்டமிழந்திருந்தார். டு ப்ளெசிஸின் விக்கெட்டினை அடுத்து முதல் நாளுக்கான மதிய உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டிருந்தது.

முதல் நாள் மதிய உணவு வேளையினை அடுத்து தமது முதல் இன்னிங்ஸை 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தவாறு தொடர்ந்த தென்னாபிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் – குயின்டன் டி கொக் ஜோடி மீண்டும் ஒரு நல்ல இணைப்பாட்டத்தினை வழங்கியது. இந்த இணைப்பாட்டத்திற்குள் எய்டன் மார்க்ரம் தனது 6ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து, கசுன் ராஜித எய்டன் மார்க்ரமை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்ய முன்னர் உருவாக்கப்பட்ட இணைப்பாட்டம் 57 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது. தென்னாபிரிக்க அணியின் ஐந்தாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த எய்டன் மார்க்ரம் 9 பெளண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

மார்க்ரமை அடுத்து தென்னாபிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதிலும் குயின்டன் டி கொக் தான் பெற்ற அரைச்சதத்துடன் பின்வரிசை வீரர் ககிஸோ றபாடாவுடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் எட்டாம் விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்த இணைப்பாட்டத்தை தனன்ஞய டி சில்வா முடிவுக்கு கொண்டு வர, விரைவாக தமது இறுதி துடுப்பாட்ட வீரர்களையும் இழந்த தென்னாபிரிக்க அணி முதல் நாளின் தேநீர் இடைவேளையை அடுத்து சிறிது நேரத்தில் 61.2 ஓவர்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 222 ஓட்டங்களை மட்டுமே முதல் இன்னிங்ஸில் பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் குயின்டன் டி கொக் டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற 17ஆவது அரைச்சதத்துடன் 12 பெளண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களை பெற்றிருக்க ககிஸோ றபாடா 22 ஓட்டங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக விஷ்வ பெர்னாந்து மற்றும் கசுன் ராஜித ஆகிய வீரர்கள் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, தனன்ஞய டி சில்வாவும் 2 விக்கெட்டுக்களை தன் பெயரின் கீழ் சொந்தமாக்கினார்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இலங்கை அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகின்றது.

களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் லஹிரு திரிமான்ன 25 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு, கசுன் ராஜித ஓட்டங்கள் ஏதுமின்றி காணப்படுகின்றார்.

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு

இலங்கை அணியில் பறிபோயிருந்த விக்கெட்டுக்களில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 17 ஓட்டங்களைப் பெற்றிருக்க, குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம், கடந்த போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை பெற்ற ஒசத பெர்னாந்து ஓட்டங்களுதுமேன்றி ஏமாற்றம் தந்திருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் டூஆன்னே ஒலிவியர் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க, ககிஸோ றபாடா ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தார்.

ஸ்கோர் விபரம்

 

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<