இளையோர் ஒலிம்பிக்கில் ஷெலிண்டாவுக்கு முதலிடம் : உலகில் 9ஆவது இடம்

306

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயேர்ஸில் நடைபெற்றுவரும் 3ஆவது கோடைகால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று (16) நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் இரண்டாம் நிலை ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர இளம் குறுந்தூர ஓட்ட வீராங்கனையான ஷெலிண்டா ஜென்சன் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.  

இளையோர் ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற இளம் வீராங்கனை பாரமி வசந்தி

ஆர்ஜெண்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் …

குறித்த போட்டியை 24.07 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை சார்பாக கனிஷ்ட வீராங்கனையொருவரால் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலைநாட்டப்பட்ட 3ஆவது அதிசிறந்த காலப் பெறுதியையும் பதிவு செய்தார். அதேநேரம், குறித்த போட்டிப் பிரிவில் ஷெலிண்டாவின் அதிசிறந்த நேரப் பெறுதியாகவும் இது பதிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

முன்னதாக, 1994ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்க 23.18 செக்கன்களிலும், 200 மீற்றரில் ஆசிய சம்பியனும், முன்னாள் வீராங்கனையுமான தமயந்தி தர்ஷா 23.21 செக்கன்களிலும் போட்டியை நிறைவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் முதல் நிலை ஓட்டப் போட்டியில் பங்குபற்றிருந்த ஷெலிண்டா, போட்டியை 25.00 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதுஇவ்வாறிக்க, இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் மெய்வல்லுனரில் இலங்கையின் கடைசி எதிர்பார்ப்பாக அமைந்த பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிக் கட்டம் நேற்று (16) நடைபெற்றது.

கடுமையான குளிருக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் 5ஆவது சுவட்டில் ஓடிய ஷெலிண்டா, போட்டியின் முதல் வளைவில் முன்னிலை பெற்றிருந்தார். தொடர்ந்து வேகமாக ஓடிய அவர், இறுதி 100 மீற்றர் வரை முன்னிலை பெற்று போட்டியை 24.07 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றார். இதற்குமுன் 24.98 செக்கன்களில் ஓடிமுடித்து தனது சிறந்த காலத்தைப் பதிவுசெய்த அவர், 0.92 செக்கன்களில் அதை மீண்டும் புதுப்பித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், குறித்த போட்டியின் முதல் நிலையில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ஸ்பெய்ன் மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளை ஷெலிண்டா ஜென்சன் வீழ்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

இதன்படி, 22 வீராங்கனைகள் பங்குபற்றிய குறித்த போட்டிப் பிரிவில் ஷெலிண்டா ஜென்சன் ஒட்டு மொத்த முடிவுகளின்படி 9ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தார்.

இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற இராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த 17 வயதான ஷெலிண்டா ஜென்சன், இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடந்த ஜுலை மாதம் பெங்கொக்கில் நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.  

இதில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், போட்டியை நிறைவுசெய்ய 25.50 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

எனினும், தகுதிச் சுற்றுப் போட்டியில் (24.99 செக்.) தனது இரண்டாவது அதிசிறந்த நேரப்பெறுதியைப் பதிவுசெய்த அவர், குறித்த போட்டிப் பிரிவில் நான்காவது சிறந்த நேரப் பெறுதியைப் பதிவுசெய்த வீராங்கனையாக இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக மொத்தமாக 13 வீர வீராங்கனைகள் பங்கேற்றிருந்ததுடன், இதன் பிரதான பதக்க எதிர்ப்பாக அமைந்த மெய்வல்லுனர் போட்டிகளில் 4 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில், பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைகக்கான முதலாவது இளையோர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

இதேநேரம், ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த செனிரு அமரசிங்க, 2.14 மீற்றர் உயரம் தாவி, தனது அதிசிறந்த உயரப் பெறுமதியுடன் 4ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல் அளித்தார்.  

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த டிலான் போகொட, 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 48.52 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இதன்படி, 206 நாடுகள் பங்குபற்றியுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தினை வென்ற இலங்கை அணி 78ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…