முதல்தரப் போட்டிகளில் புதிய சாதனை படைத்த சங்கக்கார

5507
Image Courtesy - Sports24hour

கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் ஜமெய்க்கா தலாவாஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார முதல்தரப் போட்டி, முதல்தர ஒருநாள் போட்டி (List A) மற்றும் டி20 போட்டிகளில் ஆசியாவிலேயே அதிக ஓட்டங்களைக் குவித்த கிரிக்கெட் வீரர்களில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்கின் 7ஆவது லீக் போட்டியில், ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் அணியை நான்கு விக்கெட்டுகளால் வீழ்த்தி ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் 47 ஓட்டங்களைக் குவித்த சங்ககக்கார முதல்தரப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த 2ஆவது தொழில்சார் வீரராகவும் இடம்பிடித்தார்.

சதங்களில் சாதனை படைத்த குமார் சங்கக்கார

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரத் துடுப்பாட்ட..

இப்பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர 50,192 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்திலும், குமார் சங்கக்கார 46,097 ஓட்டங்களைக் குவித்து இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் ஸஹீர் அப்பாஸ் 46,083 ஓட்டங்களைக் குவித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.  

தற்பொழுது 39 வயதாகும் குமார் சங்கக்கார அண்மைக்காலமாக சர்ரே அணிக்காக சிறந்த முறையில் பிரகாசித்து வருகின்றார். இந்நிலையில், யோக்ஷயர் அணிக்கெதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற லண்டன் றோயல் கிண்ணத் தொடருக்கான போட்டியில் அவர் 121 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் முதல்தர மற்றும் முதல்தர ஒருநாள் போட்டிகளில் 100ஆவது சதத்தினை பதிவு செய்த முதல் இலங்கை வீரர் என்ற புதிய சாதனையையும் அவர் நிலைநாட்டியிருந்தார்.

இது சங்கா முதல்தர ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்ட 39ஆவது சதமாகும். அதேபோன்று, அவரால் முதல்தர போட்டிகளில் 61 சதங்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல்தர போட்டிகளில் 142 சதங்களையும், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சஹீர் அப்பாஸ் 127 முதல்தர சதங்களையும் குவித்திருந்தனர். இதன்படி இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 37ஆவது வீரராகவும், ஆசியாவின் 3ஆவது வீரராகவும் சங்கா வரலாற்றில் இடம்பிடித்தார்.

இடது கை துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, இதுவரையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தமாக 46,097 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற அவர் இங்கிலாந்தில் இடம்பெறும் இந்த பருவகாலப் போட்டிகளைத் தொடர்ந்து முதல்தரப் போட்டிகளிலிருந்தும் முழுமையான ஓய்வினைப் பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வருடத்தின் முற்பகுதியில் குமார் சங்கக்கார முதல்தரப் போட்டிகளில் தொடர்ச்சியான தனது ஆறாவது சதத்தினை பூர்த்தி செய்து சாதனை ஒன்றினை பதிவு செய்ய இருந்தும், அதனை அவர் வெறும் 16 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சங்கக்கார, இதுவரையில் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 12,400 ஓட்டங்களினை குவித்துள்ளதோடு, 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 14,234 ஓட்டங்களினைப் பெற்றுள்ளார். அதேபோன்று, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 25 சதங்களையும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்களையும் குவித்துள்ளார்.  

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க