ரினௌன் – ஜாவா லேன் மோதல் சமநிலை : கொழும்பு அணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுபர் சன்

512

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பலம்கொண்ட ரினௌன் விளையாட்டுக் கழகம் மற்றும் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான பரபரப்பான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.  அதேவேளை, கொழும்பு கால்பந்துக் கழகம் சுபர் சன் அணியிடம் 2 கோல்களால் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.

ரினௌன் விளையாட்டுக் கழகம் எதிர் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

களனி கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நடைபெற்று முடிந்த FA கிண்ண காலிறுதியில் தோற்ற ரினௌன் அதற்கு பதலடி கொடுக்கும் வகையிலேயே ஜாவா லேன் அணியை எதிர்கொண்டது. எனினும், ஜாவா லேன் அணி ரினௌனின் ஆதிக்கத்தை முறியடித்து கடைசி நேரத்தில் பதில் கோல் ஒன்றை போட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜொப் மைக்கலின் இரட்டை கோலினால் ரினௌன் அணிக்கு வெற்றி

போட்டி ஆரம்பித்த முதல் ஐந்து நிமிடங்களில் இரு அணிகளுக்கு இடையிலும் பந்து மாறி மாறி சென்றது. எனினும், தொடர்ந்து ரினௌன் அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

முதல் 15 நிமிடங்களில் ரினௌன் முன்கள வீரர் ஜொப் மைக்கல் ஜாவா லேனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஐந்தாவது நிமிடத்தில் மைக்கல் பொனால்டி எல்லையில் இருந்து தொலை தூரத்தில் அடித்த ப்ரீ கிக்கின்போது பந்து கோல் கம்பத்தை நெருங்கிய வகையில் வெளியே சென்றது.

இந்நிலையில் 10ஆவது நிமிடத்தில் ரனௌன் வீரர்கள் ஜவா லேன் கோல் பகுதியை ஆக்கிரமித்து பந்தை பரிமாற்றியபோது மைக்கல் அந்த பந்தை கோலை நோக்கி உதைத்தபோதும் அது கோல் வலையத்தில் பட்டும் படாமலும் வெளியேறியது.

ஜாவா லேன் வீரர்கள் பந்தை தக்கவைத்துக் கொள்வதில் தடுமாற்றம் கண்டனர். அவர்களது கால்களில் பந்து தரித்திருப்பது கடினமாக இருந்தது. பந்தை பரிமாற்றுவதில் தொடர்ந்து தவறு இழைத்ததால் அவர்களால் ரினௌன் வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாமல் போனது.

மறுபுறம் ஜொப் மைக்கலுடன் ரினௌன் அணித் தலைவர் ரிப்னாஸ், ஆசாத், ட்ரவோரே மொஹமட் அகியோரின் கால்களிலேயே அதிக நேரம் பந்து சுழன்றது.

குறிப்பாக 31 ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்கு பொன்னான வாய்ப்பொன்று கிட்டியது. அந்த அணியின் ட்ரவோரே மொஹமட் பெனால்டி எல்லை பகுதிக்கு சற்று தொலைவில் இருந்து லாவகமாக உதைத்த பந்து நேராக எதிரணி கோலை நோக்கி உயரச் சென்றது. இதன்போது ஜாவா லேன் கோல் காப்பாளர் தம்மிக்க செனரத் அபாரமான முறையில் உயரப் பாய்ந்து பந்தை தட்டிவிட்டார்.

பின்னர் 40 ஆவது நிமிடத்தில் மைக்கல் உதைத்த பந்து நேராக தம்மிக்க செனரத்தின் கைக்குள் புகுந்தது.

பந்தை வசப்படுத்துவதில் தடுமாற்றம் கண்ட ஜாவா லேன் அணி முதல் பாதியின் கடைசி நேரத்தில் மஞ்சள் அட்டை ஒன்றை பெற்றது.

ரினௌன் அணி முதல் பாதி ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியபோதும் அதன் ஆக்கிரமிப்பு ஆட்டம் கோலாக மாறவில்லை. இதனால் முதல் பாதி கோலின்றி முடிந்தது.

முதல் பாதி: ரினௌன் விளையாட்டுக் கழகம் 0 – 0 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

ந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் ரினௌன் அணியின் ஆதிக்கத்திற்கு பலன் கிடைத்தது. இரண்டாவது பாதியின் முதல் மூன்று நிமிடங்களுக்குள்ளேயே மொஹமட் ஆசாத் ரினௌன் சார்பில் கோலொன்றை புகுத்தி அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

எனினும் அதுவரை தடுமாற்றம் கண்ட ஜாவா லேன் அணி, பின்னர் சுதாகரித்து ஆட ஆரம்பித்தது. பதில் கோல் பெற முயன்ற அந்த அணி முதல் பாதியில் இல்லாத ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தது.

54 ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் அணிக்கு பெனால்டி எல்லைக்கு நெருங்கிய தூரத்தில் ப்ரீ கிக் வாய்ப்பு கிட்டியபோதும் அதனை உதைத்த ஜானக்க சமிந்த கோலாக மாற்றத் தவறினார்.

போட்டியின் 60ஆவது நிமிடத்தில் ஜாவா லேனின் இளம் வீரர் நவீன் ஜூட் கோலொன்றை புகுத்தியபோது நடுவரால் அது ஓப் சைட் கோலென அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற போட்டியின் எஞ்சிய நேரங்களில் வீரர்கள் முட்டி மோதி விளையாடியதைக் காண முடிந்தது. இதனால் இரு அணியின் வீரர்கள் பலரும் மஞ்சள் அட்டையை பெற்றனர்.

பயர்ன் முனிச் அணியின் பயிற்றுவிப்பாளர் அதிரடியாகப் பதவி நீக்கம்

போட்டியில் 66, 67 ஆவது நிமிடங்களில் ரினௌன் சார்பில் ரிப்னாஸ் பந்தை எதிரணி கோல் வரை கடத்திச் சென்றபோதும், அவரால் பந்தை கோலுக்குள் புகுத்த முடியாமல் போனது.

போட்டியின் 70ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் வீரர் அடித்த ப்ரீ கிக் பந்து கோல் கப்பத்தில் இருந்து வெகு தூரத்திற்கு பறந்து சென்றது.

தொடர்ந்தும் அவ்வணி வீரர்கள் போட்டியை சமநிலைப்படுத்தும் கோலைப் பெறுவதற்காக கடைசி நிமிடங்களில் எதிரணி கோல் கம்ப எல்லையை ஆக்கிரமித்திருந்தனர்.

இதற்கு பலன் அளிக்கும் வகையில் 80ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் வீரர் பிரான்சிஸ் ரினௌன் கோல் காப்பாளரை முறியடித்து பந்தை கோலுக்குள் புகுத்தினார். இதன்மூலம் ஜாவா லேன் அணியால் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு கொண்டுவர முடிந்தது.

சமநிலையை முறியடிக்க அடுத்த பத்து நிமிடங்கள் மற்றும் மேலதிக மூன்று நிமிடங்களில் இரு அணிகளும் பரபரப்புடன் ஆடியபோதும் கோல் விழவில்லை. இதனால் போட்டி தலா ஒரு கோலுடன் சமனானது.

முழு நேரம்: ரினௌன் விளையாட்டுக் கழகம் 1 – 1 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ஆசாத் 47’

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – C. பிரான்சிஸ் 80’


கொழும்பு கால்பந்துக் கழகம் எதிர் சுபர் சன் விளையாட்டுக் கழகம்

களுத்தறை வெர்னண் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம் சுபர் சன் விளையாட்டுக் கழகத்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.

முதல் பாதி: கொழும்பு கால்பந்துக் கழகம் 0 – 1 சுபர் சன் விளையாட்டுக் கழகம்

பின்னர் இடம்பெற்ற போராட்டம் மிக்க இரண்டாவது பாதியில் கொழும்பு தரப்பினர் தமது முதல் கோலைப் பெற்று, போட்டியை சமப்படுத்துவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அவர்களது அனைத்து முயற்சிகளையும் சுபர் சன் தரப்பினர் முறியடித்தனர்.

இந்நிலையில், ஆட்டம் நிறைவுபெற சுமார் 5 நிமிடங்கள் (85) எஞ்சியிருக்கையில் அபீஸ் ஒலெய்மி தனது முன்னாள் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போட்டியின் இரண்டாவது கோலையும் பெற்றார்.

எனவே ஆட்டம் நிறைவடையும்பொழுது அபீசின் இரு கோல்களினால் சுபர் சன் அணி நடப்புச் சம்பியனை வீழ்த்தியது. இதனால் கொழும்பு கால்பந்துக் கழகம் தொடரில் தமது முதல் தோல்வியை சந்தித்தது.

முழு நேரம்: கொழும்பு கால்பந்துக் கழகம் 0 – 2 சுபர் சன் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

சுபர் சன் விளையாட்டுக் கழகம் – அபீஸ் ஒலெய்மி 27’ & 85’