இரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை

1436
Sri Lanka - Red Bull Campus Cricket - World Final

உலகின் சிறந்த பல்கலைக்கழக கிரிகெட் அணியை தெரிவு செய்வதற்காக ரெட் புல் அனுசரணையில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று (29) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிக்கட்ட போட்டிகளில் சிறந்த ஆறு பல்கலைக்கழக அணிகள் பங்குபற்றியிருந்தன. அவற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் விளையாடும் மற்றைய அணியை தெரிவு செய்வதற்கான ப்லே ஒஃப் (Play off) போட்டி நேற்று (28) நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ரெட் புல் பல்கலைக்கழக டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய இறுதிப்போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ரெட் புல் கிண்ணத்தை சவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 211 ஓட்டங்களை பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக முர்டசா சபிர் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களும் யாஷ் நாஹர் 58 ஓட்டங்கள் மற்றும் திவ்யங் ஹிங்கேகர் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்கள் என பெற்று இந்திய ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினர். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் ஜனித் லியனகே மற்றும் டேவிந்த் பத்மநாதன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

கிண்ணத்தை சுவீகரிக்கும் நோக்கில் 212 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பாக தினேத் திமோத்ய 54 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு ஏனைய வீரர்களான சுபேசல ஜயதிலக 29 ஓட்டங்கள், ஹஷான் துமிந்து 28, ரனித் லியனாரச்சி ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்கள் என தமது பங்களிப்புக்களை சிறப்பாக வழங்கி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இன்றைய இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தினேத் திமோத்ய தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 211/2 (20) – முர்டஸா சபிர் 76*, யாஷ் நாஹர் 58, திவ்யங்  ஹிங்கேகர் 46*, ஜனித் லியனகே 44/1, டேவிந்த் பத்மநாதன் 45/1

இலங்கை – 212/6 (20) – தினேத் திமோத்ய 54, சுபேசல ஜயதிலக 29, ஹஷான் துமிந்து 28, ரனித் லியனாரச்சி 26*, ரொஹான் டம்லே 30/4

முடிவு – இலங்கை அணி 4 விக்கெட்டுகளால்  வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<