இலங்கை அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கிய ரங்கன ஹேரத்தின் காயம்

216

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் விளையாடுவது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை கிரிகெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் வலது கையின் இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்திமால், சந்திக்க, அசங்க

இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முறைகேடான விதத்தில்  பந்தின் தன்மையை மாற்றியமைத்தார் என்ற குற்றத்திற்காக ஐ.சி.சி இனால் ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியின் தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹேரத் தற்பொழுது அணியில் இருந்து விலகியுள்ளமையானது இலங்கை அணிக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்துள்ளது. எனினும் தற்போது சுரங்க லக்மால் தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் ஓய்வைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ரங்கன ஹேரத்தின் பங்களிப்பானது முரளியின் இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அணியின் வெற்றிகளுக்கும் கணிசமான பங்களிப்பு செய்துள்ளார் என்பதும் முக்கிய அம்சமாகும். மேற்கிந்திய தீவுகளுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி பின்தங்கிய நிலையில் உள்ளதால் தொடர் தோல்வியில் இருந்து தவிர்ப்பதற்காக மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள இலங்கை அணிக்கு ஹேரத் போன்ற அனுபவ வீரர்களின் விலகல் பாரிய இழப்பாக கருதப்படுகிறது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க