மற்றுமொரு டி20 தொடரை வைட் வொஷ் செய்தது பாகிஸ்தான்

4
Image Courtesy - Getty Image

சுற்றுலா நியுஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று (4) நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3-0 என டி20 தொடரை கைப்பற்றியது. இவ்வெற்றியானது பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற 11ஆவது சர்வதேச டி20 தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நியுஸிலாந்திற்கு எதிராக 2 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

விறுவிறுப்பாக நடைபெற்ற பாகிஸ்தான் ….

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்த பாகிஸ்தான் அணி சார்பாக வகாஸ் மக்சூத் டி20 சர்வதேச போட்டிகளின் அறிமுக வீரராக இணைக்கப்பட்டிருந்தார்.  

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில்  3 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் 79 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் வேகமாக 1000 ஓட்டங்களை கடந்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்து தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்தார்.

1000 ஓட்டங்கள் பெற விராட் கோஹ்லி 27 இன்னிங்ஸ்களில் விளையாடியிருந்ததோடு பாபர் அசாம் 26 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் சுஹைப் மலிக் அதிரடியாக 19 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தனர்.

முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றியை பெறுவதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 16.5 ஓவர்களில் சலக விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. இது பாகிஸ்தான் அணியினால் எதிரணியின் சகல விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 31 ஆவது சந்தர்ப்பமாகும்.

நியுஸிலாந்து அணி தமது முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 13 ஓட்டங்களுக்கு இழந்திருந்தது. எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்  க்லென் பிலிப்ஸ் மற்றும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் 83 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஏனைய வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

நியுஸிலாந்து அணி தமது கடைசி 8 விக்கெட்டுகளையும் வெறும் 23 ஓட்டங்களுக்கு இழந்தமை பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சுக்கு எடுத்துக்காட்டாகும். அவ்வணி சார்பாக சதாப் கான் மூன்று விக்கெட்டுகளையும் வகாஸ் மக்சூத் மற்றும் இமாத் வசீம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.  

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக சாதனை நாயகன் பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு தொடர் நாயகன் விருது மொஹமட் ஹபீஸிற்கு வழங்கப்பட்டது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி 166/3 (20) – பாபர் அசாம் 79,  மொஹமட் ஹபீஸ் 53*, கிரன்ட்ஹோம் 41/2

நியுஸிலாந்து அணி 119 (16.5) – வில்லியம்சன் 60, பிலிப்ஸ் 26, சதாப் கான் 30/3, வகாஸ் மக்சூத் 21/2, இமாத் வஷீம் 28/2

முடிவு : பாகிஸ்தான் அணி 47 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<