எந்தவித வெற்றியுமின்றி நாடு திரும்பும் இலங்கை கனிஷ்ட அணி

78
Photo Credit - AFC

தஜிகிஸ்தானில் நடைபெற்று முடிந்திருக்கும் 19 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான 2018 ஆம் ஆண்டின் ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத் தொடரின் (AFC Cup) தகுதிகாண் போட்டிகளில் B குழுவிற்கான இறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை கனிஷ்ட அணியை இலகுவாக வீழ்த்தியுள்ளது.

ஹிசோர் மத்திய கால்பந்து அரங்கில் இன்று (8) நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வெற்றியீட்டிருந்த போதிலும் தொடரில் மொத்தமாக இரண்டு வெற்றிகளை மாத்திரமே பெற்றிருந்த காரணத்தினால் ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை அவ்வணி இழந்திருக்கின்றது.

தமது குழுவில் முன்னர் இடம்பெற்ற தஜிகிஸ்தானுக்கு எதிரான போட்டியை கோல்கள் ஏதுமின்றி சமநிலைப்படுத்தியிருந்த பங்களாதேஷ், அதனை அடுத்து மாலைதீவுடனான போட்டியை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டிருந்தது. எனினும் போட்டியின் மேலதிக நேரத்தில் ஒவ்ன் கோலொன்றின் மூலம் உஸ்பகிஸ்தான் அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல்கள் கணக்கில் பங்களாதேஷ் துரதிஷ்டவசமாக தோல்வியைத் தழுவியிருந்தது.

மறுமுனையில் இலங்கை அணி மாலைதீவுடனான போட்டியை 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமப்படுத்தியிருந்த அதேவேளை, உஸ்பகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் அணிகளுடனான போட்டிகளில் முறையே 10-0 மற்றும் 6-0 என்கிற கோல்கள் அடிப்படையில் படுதோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாம் பங்கேற்கின்ற இந்த இறுதிப் போட்டியில் ஆறுதல் வெற்றியொன்றை எதிர்பார்த்து பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை வீரர்களுக்கு விடயங்கள் எதுவும் சரியான விதத்தில் நடைபெற்றிருக்கவில்லை.

இறுதி நிமிட கோலினால் இராணுவப்படையை வீழ்த்திய ரினௌன்

பங்களாதேஷ் அணிக்கான முதல் கோலை 13ஆவது நிமிடத்தில் பிஷ்வனாத் கோஷ் பெற அதையடுத்து றியாதுல் ஹஸன் 33ஆவது நிமிடத்தில் இரண்டாம் கோலுடன் தனது தரப்பினை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வலுப்படுத்தியிருந்தார்.

இரண்டாம் கோல் பெறப்பட்டு ஐந்து நிமிடங்களின் பின்னர் மஹ்புபுர் ரஹ்மான் பெற்ற 3 ஆவது கோலுடன் பங்களாதேஷ் மேலும் உறுதியடைந்து கொண்டது. முதல் பாதி நிறைவடைந்த பின்னர் மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்தில் மீண்டும் ரஹ்மான் கோலொன்றைப் பெற முதல் பாதியில் பங்களாதேஷ் 4-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் காணப்பட்டது.

முதல் பாதி: பங்களாதேஷ் 4 – 0 இலங்கை

போட்டி தமது கையை மீறிச் சென்றதை உணர்ந்த இலங்கை வீரர்கள் தமது பின்களத்தை இரண்டாம் பாதியில் மிகவும் பலப்படுத்தினர். இதனால் பங்களாதேஷினால்  எந்த கோல்களையும் போட்டியின் இறுதிவரை பெற முடியாது போயிருந்தது.

முழு நேரம்: பங்களாதேஷ் 4 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

பங்களாதேஷ் – பிஷ்வனாத் கோஷ் 13’, றியாதுல் ஹஸன் 33’, மஹ்புபுர் ரஹ்மான் 38’, 45+1’

புள்ளிகள் அட்டவணை – குழு B

மேலும் கால்பந்து பற்றிய செய்திகளை அறிய